
பணிச் சுமையையும், உடல் தகுதியையும் முறையாகக் கையாளுவதே வெற்றிக்குக் காரணம் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறினார்.
அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஜோஹன்னஸ்பர்க்கில் நேற்று செய்தியாளர்களிடம், "இந்திய அணி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, அணியினர் ஷாட் பிச் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அத்தகைய பந்துவீச்சை எதிர்கொள்வதில் திறமையற்றவர்கள் என்ற எண்ணம் இருந்தது.
ஆனால், இந்த தென் ஆப்பிரிக்க தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் அந்த எண்ணத்தை மாற்றியுள்ளனர்.
ஷாட் பிச் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது என இந்திய வீரர்கள் அறிந்துகொண்டனர். அதனால்தான் முதல் டி20 ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த தென் ஆப்பிரிக்கா வீசிய 5-6 ஷாட் பிச் ஓவர்கள், அவர்களுக்கே பாதகமாக முடிந்தது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய பேட்டிங் வரிசை மீது இருந்த பிம்பத்துக்கு நேரெதிராக நமது பேட்ஸ்மேன்கள் ஆடினர். தென் ஆப்பிரிக்க தொடரின் மூலம் ஷாட் பிச் பந்துகளை எதிர்கொள்ளும் நுட்பத்தை இந்திய வீரர்கள் அறிந்துகொண்டனர்.
எனது பந்துவீச்சைப் பொருத்த வரையில், அதன் வேகத்தில் மாற்றம் கொண்டு வர முயற்சிக்கிறேன். பந்தின் வேகத்தை குறைக்கும்போது அதை அடிப்பது எளிதாக இருக்காது. அதையே முதல் டி20 ஆட்டத்தில் முயற்சித்தேன். இந்த பந்துவீச்சு முறையை பேட்ஸ்மேன்களுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மாற்றி பயன்படுத்த வேண்டியது முக்கியம்.
உதாரணமாக, வான்டரர்ஸ் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் ஹிட் செய்யாதவாறு பந்தை மெதுவாக வீசுவதே எங்களின் வியூகம். அதையே முதல் டி20 ஆட்டத்தில் பயன்படுத்தினோம். அது பேட்ஸ்மேன்கள் அதிகம் ஸ்கோர் செய்யாமல் தடுக்க உதவியது.
களம் காணும்போது, பந்துவீச்சாளராக நாங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை முழுமையாக அறிந்து அதையே செயல்படுத்தினோம். ஒட்டுமொத்த அணியும் உந்துதலுடன் செயல்பட்டதாலேயே வெற்றி சாத்தியமானது.
என்னைப் பொருத்த வரையில் எனது பணிச் சுமையையும், உடல் தகுதியையும் முறையாகக் கையாளுவதே வெற்றிக்குக் காரணம்.
நாட்டுக்காக விளையாடும்போது விக்கெட்டுகள் வீழ்த்துவதென்பது என்னைப் பொருத்த வரையில் முக்கியமான ஒன்று. அணியை வெற்றி பெறச் செய்யும் வரையில் விக்கெட் கணக்குகளை கவனத்தில் கொள்ளக் கூடாது.
எனினும், அனைத்து ஃபார்மட்டிலும் ஓர் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.