எலும்பு முறிவுடன் ஆடியது ஏன்..? தமீம் இக்பால் விளக்கம்

By karthikeyan VFirst Published Sep 17, 2018, 10:19 AM IST
Highlights

ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் எலும்பு முறிவுடன் கடைசி நேரத்தில் களமிறங்கியது ஏன் என்பது குறித்து வங்கதேச வீரர் தமீம் இக்பால் விளக்கமளித்துள்ளார்.
 

ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் எலும்பு முறிவுடன் கடைசி நேரத்தில் களமிறங்கியது ஏன் என்பது குறித்து வங்கதேச வீரர் தமீம் இக்பால் விளக்கமளித்துள்ளார்.

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வங்கதேச வீரர் தமீம் இக்பாலின் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்தது. 

இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது ஓவரில் கையில் காயத்துடன் தமீம் இக்பால் வெளியேறினார். முதல் இரண்டு ஓவர்களிலேயே மூவரை இழந்த வங்கதேச அணியை ரஹீம் அபாரமாக ஆடி மீட்டெடுத்தார். இக்கட்டான நேரத்தில் மனவலிமையுடன் சூழலை நிதானமாக கையாண்டு அபாரமாக ஆடினார். மூன்று ஓவர்கள் எஞ்சிய நிலையில், 9வது விக்கெட்டாக முஸ்தாபிசுர் அவுட்டாக, யாரும் எதிர்பாராத வகையில், எலும்பு முறிவுடன் கையில் கட்டுடன் களமிறங்கினார் தமீம் இக்பால். களமிறங்கியது மட்டுமல்லாமல் ஒரு பந்தை ஒற்றை கையில் எதிர்கொண்டு பேட்டிங்கும் செய்தார். 

வலியை பொறுத்துக்கொண்டு துணிச்சலுடன் தமீம் களமிறங்கியதால் அந்த அணிக்கு 32 ரன்கள் கூடுதலாக கிடைத்தது. தமீமை எதிர்முனையில் நிறுத்திவிட்டு, 32 ரன்களை சேர்த்தார் ரஹீம். 

இந்நிலையில், எலும்பு முறிவுடன் தான் களமிறங்கியது ஏன் என்பது குறித்து தமீம் இக்பால் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவிற்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள தமீம், கேப்டன் மோர்டஸா என்னிடம் நான் களமிறங்க வேண்டுமென்று கூறியபோது அவர் ஜோக் அடிக்கிறார் என்றே நினைத்தேன். கடைசி ஓவராக இருந்தால் நான் களமிறக்கப்படலாம் என்ற திட்டம் இருந்தது. ரூபல் ஹுசைன் கிரீசில் இருந்த போது நான் கால்காப்பைக்கட்டி தயாரானேன். 

என் வாழ்க்கையில் முதன்முறையாக எனக்கு கிளவ்வை ஒருவரும் அப்டமன் கார்டை ஒருவரும் கால்காப்புகளை மற்றொருவரும் என ஆளாளுக்கு ஒன்றை மாட்டிவிட்டனர்.  முஸ்தாபிசுர் அவுட்டானவுடன் எனக்கு இறங்க வேண்டுமா என்ற எண்ணம் கொஞ்சம் கூட ஏற்படவில்லை. சற்றும் யோசிக்காமல் களத்திற்கு சென்றேன். 

அந்த ஒரு பந்தில் நான் அவுட்டாகாமலும் அடிபடாமலும் தப்பித்தால்  அடுத்த ஓவரில் ரஹீம் அடிக்கும் ஒவ்வொரு ரன்னும் அணிக்கு முக்கியம் என்ற எண்ணமே இருந்தது. ஆனால் நான் அந்த ஒரு பந்தை ஆடுவேன் என யாரும் எதிர்பார்க்கவில்லை. நான் அந்த ஒரு பந்தை ஆடியதும், மறுமுனையில் இருந்த ரஹீம், அபாரமாக ஆடி 32 ரன்களை குவித்தார். 

பவுலர் ஓடி வரும் போது அந்த 10 நொடிகளில் தைரியம் அடைந்தேன். மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்களின் ஆரவாரம் எனக்கு உத்வேகமளித்தது. அந்த தருணத்தில் நான் என் நாட்டுக்காகவும் அணிக்காகவும் கடமையாற்றுவதை லட்சியமாக கொண்டிருந்தேன். அடிபட்ட கை பின்னால்தான் இருந்தது, ஆனால் ஆடும்போது முன்னால் தானாகவே வந்தது, பந்தை விட்டிருந்தால் என் கையைப் பதம் பார்த்திருக்கும் என தமீம் தெரிவித்தார். 
 

click me!