கிரிக்கெட் உலகே பாராட்டும் இந்திய பவுலிங்கை கிழித்தெறிந்த சர்ச்சை வீரர்!!

By karthikeyan VFirst Published Sep 17, 2018, 1:41 PM IST
Highlights

இங்கிலாந்தில் இந்திய அணியின் பந்துவீச்சு திருப்திகரமாக இல்லை என சர்ச்சை வீரர் ஸ்ரீசாந்த் விமர்சித்துள்ளார். 
 

இங்கிலாந்தில் இந்திய பவுலர்கள் பந்துவீசிய விதம் திருப்திகரமாக இல்லை என சர்ச்சைக்குரிய பவுலரான ஸ்ரீசாந்த் விமர்சித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-4 என இழந்தது. இந்த தொடரில் பேட்டிங்கில் சொதப்பியதால் தான் இந்திய அணி தொடரை இழந்தது. பவுலர்கள் சிறப்பாகவே வீசினர். சில போட்டிகளில் மட்டும் கீழ்வரிசை வீரர்களை அதிகநேரம் களத்தில் நிலைக்கவிட்டு ரன்களை குவிக்க விட்டுவிட்டனர். அதைத்தவிர்த்து மற்றபடி இந்திய பவுலர்கள் சிறப்பாகவே வீசினர். 

தற்போதைய இந்திய அணியின் பவுலிங் யூனிட் தான் மிகச்சிறந்தது. இதுவரை இந்திய அணியில் இப்போது இருப்பதை போன்ற சிறந்த கலவையிலான பவுலிங் யூனிட்டை பார்த்தது கிடையாது என பல முன்னாள் வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் பாராட்டி வருகின்றனர். தான் ஆடிய காலத்தில் கூட இப்படியான சிறந்த பவுலிங் யூனிட் இல்லை என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் இந்திய பவுலர்கள், மொத்தமாக 85 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர பவுலரான இஷாந்த் சர்மா, 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து தொடரில் பேட்ஸ்மேன்கள் மீது விமர்சனங்கள் எழுந்தனவே தவிர, பவுலர்கள் மீது அப்படியான விமர்சனங்கள் எழவில்லை. 

இந்நிலையில், இங்கிலாந்தில் இந்திய பவுலர்கள் இன்னும் சிறப்பாக வீசியிருக்க வேண்டும் எனவும் இந்திய அணியின் பவுலிங் திருப்திகரமாக இல்லை எனவும் ஸ்ரீசாந்த் சாடியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள ஸ்ரீசாந்த், நான் இங்கிலாந்து தொடர் முழுவதையும் பார்த்தேன். இந்திய அணியின் பவுலிங் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. டிராவிட்டின் தலைமையில் நாங்கள் 2007ல் இங்கிலாந்தில் ஆடியபோது, நான், ஆர்.பிங்.சிங், ஜாகீர் கான் ஆகியோர் இணைந்து லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியை காப்பாற்றி கொடுத்தோம். 

2007ல் ஆடிய பவுலர்கள்தான் சிறந்தவர்கள் என்று நியாயப்படுத்துவதற்காக இதை கூறவில்லை. ஆனால் அனுபவ பவுலரான இஷாந்த் சர்மா இன்னும் சிறப்பாக வீசியிருக்க வேண்டும். குறைந்தது 25 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருக்க வேண்டும். அவர் 18 விக்கெட்டுகளைத்தான் வீழ்த்தியிருக்கிறார். ஒரு இன்னிங்ஸில் 3, மற்றொரு இன்னிங்ஸில் 2 என மொத்தம் ஒரு போட்டியில் குறைந்தது 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி வீழ்த்த தவறிவிட்டார் என ஸ்ரீசாந்த் சாடியுள்ளார். 

ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 87 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மூன்று முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2007ல் டிராவிட் தலைமையிலான இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் 2011ல் தோனி தலைமையிலான இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஆகியவற்றில் ஸ்ரீசாந்த் இடம்பெற்றிருந்தார். சூதாட்டப்புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்திற்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!