தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ரபாடா மீதான தடை ரத்து; எச்சரித்தது ஐசிசி...

First Published Mar 21, 2018, 10:42 AM IST
Highlights
South African batsman Rafaud ban canceled ICC warned


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது விதிகளை மீறிச் செயல்பட்ட குற்றச்சாட்டில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா மீதான தடை ரத்து செய்யப்பட்டது. 

இதனையடுத்து எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்.

தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகள் நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வென்று சமநிலையில் உள்ளன.

இதில் போர்ட் எலிசபெத்தில் இம்மாதம் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித், ரபாடா பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.

அந்த மகிழ்ச்சியில் ரபாடா ஸ்டீவ் ஸ்மித் தோள்பட்டையில் மோதினார். இது தொடர்பாக களநடுவர்கள் அளித்த புகாரின் பேரில் ரபாடாவுக்கு எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தடை விதிக்கப்பட்டது. 

அத்துடன், போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவரது தரவரிசைப் புள்ளிகளில் 3-ம் குறைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் ரபாடா.

பின்னர் அவர் ஐசிசியில் மேல் முறையீடு செய்தார். அதன் மீதான விசாரணையை ஜுடிஷியல் ஆணையர் மைக்கெல் ஹெரான் காணொளிக் காட்சி வாயிலாக நடத்தினார். 

அப்போது ரபாடாவிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் ஹெரான் வெளியிட்ட முடிவின் படி, எஞ்சிய இரண்டு போட்டிகளில் ரபாடா மீதான தடை ரத்து செய்யப்பட்டது. மேலும், அவரது போட்டி ஊதியத்தில் விதிக்கப்பட்ட 50 சதவீத அபராதம், 25 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. மேலும், 3 தரவரிசை புள்ளிகளுக்குப் பதிலாக, ஒரு தரவரிசை புள்ளி குறைக்கப்பட்டது.

எனினும், விதிகளை மீறியதாக அவர் இன்னும் ஓர் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகும் பட்சத்தில், அவருக்கு தடை விதிக்கப்படும் என்று முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

tags
click me!