கொஞ்ச நாள் வெயிட் பண்ணா குறைஞ்சு போயிட மாட்டார்.. அந்த பையனையே இறக்குறதுதான் நல்லது!! சேவாக் தடாலடி

By karthikeyan VFirst Published Nov 29, 2018, 2:02 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடியாக யார் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் அதிரடி தொடக்க வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 
 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடியாக யார் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் அதிரடி தொடக்க வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தும் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தொடர் தோல்வியை தழுவிவரும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அந்த அணியை வீழ்த்தி தங்கள் பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் உள்ளது. அதேபோல ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் சிதைந்து போய், தொடர் தோல்விகளை சந்தித்துவரும் ஆஸ்திரேலிய அணியும் இந்தியாவை வீழ்த்தி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளுமே டெஸ்ட் தொடரை வெல்லும் தீவிரத்தில் உள்ளது. 

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முரளி விஜய் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட முரளி விஜய், வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தொடரிலும் புறக்கணிக்கப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். 

பிரித்வி ஷா, முரளி விஜய், ராகுல் ஆகிய மூவரும் உள்ளதால் தொடக்க வீரர்களாக யார் இறங்குவது என்பது பெரிய கேள்வியாக உள்ளது. தொடர்ந்து மிரட்டலாக ஆடிவரும் பிரித்வி ஷா களமிறங்குவது உறுதி. பிரித்வியுடன் யார் இறங்குவது என்பதுதான் பெரிய கேள்வி. 

வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் முரளி விஜய் நல்ல ரெக்கார்டுகளை வைத்திருக்கும் அதேவேளையில், தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டும் அவற்றையெல்லாம் வீணடித்து தொடர்ந்து சொதப்பிவருகிறார் ராகுல். ராகுல் சொதப்ப சொதப்ப வாய்ப்புகள் வழங்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் அவர் பயன்படுத்தி கொள்வதில்லை. ஃபார்மில்லாமல் தவித்துவரும் ராகுல், தொடர்ந்து சொதப்பிவருகிறார். இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக சொதப்பிய ராகுல், ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். 

பயிற்சி போட்டியில் ராகுலை தொடக்க வீரராக களமிறக்கியிருப்பதன் மூலம் அவர்தான் அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ஓபனர் என்பதை பறைசாற்றுகிறது இந்திய அணி. ஆனால் வெளிநாடுகளில் நல்ல ரெக்கார்டை வைத்திருக்கும் முரளி விஜய், மிகச்சிறந்த வீரர். அவர் பிரித்வியுடன் தொடக்க வீரராக இறங்குவதுதான் சரியாக இருக்கும். பிரித்வி அடித்து ஆட, முரளி விஜய் நிதானமாக ஆட பார்ட்னர்ஷிப் நன்கு அமையும் என கவாஸ்கர் கருத்து தெரிவித்திருந்தார். 

ஆனால் கவாஸ்கரின் கருத்தை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் பயிற்சி போட்டியில் ராகுலே ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார். 

இதற்கிடையே இந்திய அணியின் தொடக்க ஜோடி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் தொடக்க வீரர் சேவாக், நான் கேப்டனாக இருந்தால் ஆஸ்திரேலிய தொடர் முழுவதுமே கேஎல் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரையும்தான் தொடக்க ஜோடியாக களமிறக்குவேன். ஏனென்றால் முரளி விஜய்க்கு ஏற்கனவே வாய்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன. இனிமேல் அணியில் மீண்டும் வாய்ப்பை பெற அவர் காத்திருக்க வேண்டும். ஒரு வீரர் எட்டு இன்னிங்ஸ்களில் அடிக்க தவறினால் மட்டுமே முரளி விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவேண்டும் என்பது என் கருத்து. பிரித்வி ஷா ஏற்கனவே அவரது திறமையை நிரூபித்துள்ளார். இந்த தொடர் முழுவதுமே அவர் ஆட வேண்டும் என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 

பிரித்வி ஷாவுடன் முரளி விஜயை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு முற்றிலும் முரணான கருத்தை சேவாக் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!