அந்த பையனை நான் போட்டியாவே நினைக்கல.. பெருந்தன்மையுடன் பேசிய சீனியர் வீரர்

By karthikeyan VFirst Published Feb 19, 2019, 5:21 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரிஷப் பண்ட். 

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2014ம் ஆண்டு தோனி ஓய்வுபெற்ற பிறகு, ரித்திமான் சஹா இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயமடைந்த சஹா, அதன்பிறகு இந்திய அணியில் ஆடவேயில்லை. இதற்கிடையே ஐபிஎல்லில் ஆடி காயத்தை வளர்த்துக்கொண்டார். அதிலிருந்து அவர் மீள்வதற்குள்ளாக ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட், இங்கிலாந்து சுற்றுப்பயணம், வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் என காலம் ஓடிவிட்டது. 

சஹா விட்டுச்சென்ற இடத்தை பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக் ஆகியோரை வைத்து நிரப்ப முயன்ற இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாததால் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இங்கிலாந்து தொடரில் இந்திய அணியில் அறிமுகமானார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரிஷப் பண்ட். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்திய ரிஷப் பண்ட், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிலும் அபாரமாக ஆடினார். 

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடி தனது திறமையை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட், உலக கோப்பை அணியில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்திய அணியில் அறிமுகமான குறுகிய காலத்தில் இந்தளவிற்கு உயர்ந்திருப்பது பெரிய விஷயம்தான். 

ரிஷப் பண்ட் இந்திய அணியில் அசைக்கமுடியாத இடத்தை பெற்றுள்ள நேரத்தில், சஹா காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்து உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் பெங்கால் அணிக்காக ஆட உள்ளார்.

இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள சஹா, ரிஷப் பண்ட்டை நான் போட்டியாக நினைக்கவில்லை. நான் காயத்தால் வெளியேறினேன், எனது இடத்திற்கு ரிஷப் பண்ட் வந்தார். எந்த வீரராக இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பர். அதைத்தான் ரிஷப் பண்ட்டும் செய்தார். அவருடன் நான் பழகியுள்ளேன். ஆட்டம் குறித்து இருவரும் நிறைய பேசியிருக்கிறோம். அவரை நான் போட்டியாக நினைக்கவில்லை. என்னுடைய கவனமெல்லாம் நான் நன்றாக ஆடுவதில் தான் உள்ளது என்று சஹா தெரிவித்துள்ளார். 
 

click me!