எல்லா கிரெடிட்டும் அவங்களுக்குத்தான்!! அதை கண்டிப்பா சமாளிச்சுத்தான் ஆகணும்.. கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி

By karthikeyan VFirst Published Jan 31, 2019, 12:57 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் அனைத்து வகையிலும் அந்த அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய இந்திய அணி, நான்காவது போட்டியில் அதற்கு அப்படியே நேர்மாறாக ஆடியது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றில் இந்திய அணி ஆடிவருகிறது. 

முதலில் ஒருநாள் தொடர் நடந்துவரும் நிலையில், முதல் மூன்று போட்டிகளில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே நியூசிலாந்து அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய இந்திய அணி, 3 போட்டிகளிலும் வென்று தொடரை வென்றுவிட்டது. 3-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், நான்காவது போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. 

இந்த போட்டியில், முதல் மூன்று போட்டிகளில் ஆடியதற்கு அப்படியே நேர்மாறாக ஆடியது இந்திய அணி. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய தொடக்கம் முதலே விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. டிரெண்ட் போல்ட்டின் வேகத்தை சமாளிக்க முடியாமல் இந்திய அணி சரிந்தது. வெறும் 92 ரன்களில் ஆல் அவுட்டானது இந்திய அணி. 93 ரன்கள் என்ற இலக்கை 15வது ஓவரிலேயே எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றியை பதிவு செய்தது. 

முதல் 3 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்த நியூசிலாந்து அணிக்கு இந்த வெற்றி உத்வேகம் அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. அதேநேரத்தில் 3 போட்டிகளில் அபாரமாக ஆடி அனைத்து வகையிலும் நியூசிலாந்து அணி மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய இந்திய அணிக்கு இந்த படுதோல்வி தக்க பாடம். இந்த போட்டி முழுவதுமே நியூசிலாந்து அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி செய்ததை இந்த போட்டியில் நியூசிலாந்து செய்தது. 

போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, நாங்கள் மோசமாக பேட்டிங் ஆடிய ஆட்டங்களில் இதுவும் ஒன்று. இதை நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. எல்லா கிரெடிட்டும் நியூசிலாந்து பவுலர்களுக்குத்தான். நாங்கள் இந்த தோல்வியிலிருந்து சில பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இந்த தோல்விக்கு நாங்கள்தான் பொறுப்பு. எங்கள் மீதே நாங்கள் குற்றம்சாட்டி கொள்வதுதான் சரி. பந்து ஸ்விங் ஆடும்போது ஆடுவது கடினம். ஆனால் ஸ்விங் பந்துகளை சமாளித்து ஆட வேண்டும். நாங்கள் சில மோசமான ஷாட்டுகளை ஆடினோம். நாட்டுக்காக ஆடும்போது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார். 
 

click me!