ஹர்திக் பாண்டியாலாம் ஒரு ஆளே இல்ல.. அலட்சியப்படுத்திய ஆல்ரவுடண்டர்

First Published Feb 23, 2018, 4:45 PM IST
Highlights
roger binny criticize hardik pandya


ஹர்திக் பாண்டியாவிற்கு ஆல்ரவுண்டர் என்ற அடையாளம் கிடைத்தது அவரது அதிர்ஷ்டம் என முன்னாள் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் என்ற கனவை நீண்ட காலத்திற்கு பிறகு பூர்த்தி செய்தவராக ஹர்திக் பாண்டியா பார்க்கப்படுகிறார். சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் பாகிஸ்தானுக்கு எதிராகவும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் அணிக்கு தேவையான வகையில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 

ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த ஒரு இன்னிங்சை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பினார். பேட்டிங்கில் சொதப்பினாலும் பவுலிங், சிறப்பான பீல்டிங் என ஏதாவது ஒரு வகையில் அணியின் வெற்றிக்கு உதவுகிறார் ஹர்திக் பாண்டியா. 

முன்னாள் கேப்டன் கபில் தேவுடன் ஹர்திக் பாண்டியாவை சிலர் ஒப்பிட்டனர். கபில் தேவிற்கு பிறகு இந்தியாவிற்கு கிடைத்த சிறந்த ஆல்ரவுண்டர் பாண்டியா என வர்ணிக்கப்பட்டார். ஆனால் சிலர் இந்த கருத்திலிருந்து முரண்படுவதோடு ஹர்திக் பாண்டியாவையும் விமர்சிக்கின்றனர்.

அவ்வாறாக முன்னாள் ஆல்ரவுண்டரும் கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் தந்தையுமான ரோஜர் பின்னி, ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

பாண்டியா ஆல்ரவுண்டராகப் பார்க்கப்படுவது அவரது அதிர்ஷ்டம், பேட்டிங்கில் பங்களிப்பு செய்யவில்லை. பந்து வீச்சில் ஒன்றிரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதால் அணியில் நீடிக்கிறார். டி20 கிரிக்கெட்டில் அவரது ஆட்டத்தை வைத்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் முற்றிலும் வேறானது. 

கபில்தேவ் உள்நாட்டு கிரிக்கெட்டை நன்றாகப் பயன்படுத்தி ரன்களைக் குவித்தவர். முதல் தர கிரிக்கெட்டில் சதங்களை எடுத்த பிறகுதான் கபில்தேவ் டெஸ்ட் அணிக்கு வந்தார். ஆனால் பாண்டியா உள்நாட்டு கிரிக்கெட்டில் பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்களை எடுத்ததில்லை. ஆனால் அதற்குள்ளாக டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விட்டார். டாப் லெவலுக்கு வருவதற்கு முன்பாக முதல் தர கிரிக்கெட்டில் ரன்கள் எடுக்க வேண்டாமா? என பின்னி ஆதங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
 

click me!