ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபார சாதனை!! தோனியே செஞ்சது இல்லைனா பாருங்களேன்.. ரிஷப் பண்ட் அதுக்குள்ள செஞ்சுட்டாரு

By karthikeyan VFirst Published Dec 8, 2018, 11:02 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கீப்பராக தோனி கூட செய்யாத சாதனையை ரிஷப் பண்ட் செய்துள்ளார்.
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கீப்பராக தோனி கூட செய்யாத சாதனையை ரிஷப் பண்ட் செய்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் தோனிக்கு பிறகு சரியான விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் அமையவில்லை. ரித்திமான் சஹா விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்கினாலும் பேட்டிங்கில் பெரியளவில் சோபிக்கவில்லை. சஹா காயத்திற்கு பிறகு பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக் ஆகியோரை இந்திய அணி முயற்சித்து பார்த்தது. 

ஆனால் அவர்கள் இருவரும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான ரிஷப் பண்ட், பேட்டிங்கில் ஓரளவு சோபித்தாலும் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பினார். கேட்ச்களையும் சில பந்துகளையும் தவறவிட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் விக்கெட் கீப்பிங் மிக முக்கியம். அதில் சிறு தவறு இழைத்தால் கூட பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும். அதுபோன்ற சிறு சிறு தவறுகளை ரிஷப் பண்ட் செய்தார். மேலும் அவரது விக்கெட் கீப்பிங் டெக்னிக்கும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 

எனினும் இளம் வீரர் என்பதாலும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புதியவர் என்பதாலும் அவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக இப்போதெல்லாம் கேட்ச்களை விடுவதில்லை. அவ்வப்போது சில பந்துகளை மட்டும் தவறவிடுகிறார். ஆனாலும் முன்பிருந்ததை விட ஓரளவிற்கு தேறிவிட்டார் என்றே கூறவேண்டும்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்துவரும் டெஸ்ட் போட்டியில், அந்த அணியின் முதல் இன்னிங்ஸில் 6 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்துள்ளார். கவாஜா, ஹேண்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகிய 6 பேரின் கேட்ச்களை பிடித்தார் ரிஷப் பண்ட். 

இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 6 கேட்ச்கள் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். முன்னதாக  டெனிஸ் லிண்ட்ஸே(தென்னாப்பிரிக்கா), ஜேக் ரசல்(இங்கிலாந்து), அலெக் ஸ்டீவார்ட்(இங்கிலாந்து), கிறிஸ் ரீட்(இங்கிலாந்து), மாட் பிரையர்(இங்கிலாந்து) ஆகிய விக்கெட் கீப்பர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 6 கேட்ச்களை பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் 7 கேட்ச்களை பிடித்த வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ரிட்லி ஜேகப்ஸ் முதலிடத்தில் உள்ளார். 

தோனியும் ஒரே இன்னிங்ஸில் 6 கேட்ச்களை பிடித்துள்ளார். 2009ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 6 கேட்ச்கள் பிடித்துள்ளார் தோனி. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதை செய்ததில்லை. 
 

click me!