
இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அடித்து விலாசி செம்ம ஆட்டம் கொடுத்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 137.3 ஓவர்களில் 451 ஓட்டங்கள் குவித்தது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
ஸ்மித் 117, மேக்ஸ்வெல் 82 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாளான நேற்றுத் தொடர்ந்து ஆடிய அந்த அணியில் கிளென் மேக்ஸ்வெல் சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இது.
ஆஸ்திரேலிய அணி 331 ஓட்டங்களை எட்டியபோது மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார். அவர் 185 பந்துகளில் 104 ஓட்டங்கள் குவித்தார்.
இதையடுத்து களம் கண்ட மேத்யூ வேட் வேகமாக ரன் சேர்த்தார். மேத்யூ வேட்-ஸ்மித் ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 64 ஓட்டங்கள் சேர்த்தது. 50 பந்துகளைச் சந்தித்த மேத்யூ வேட் 6 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்பிறகு வந்த பட் கம்மின்ஸ் டக் அவுட்டாக, ஸ்டீவ் ஓ’கீஃப் களமிறங்கினார். அவர் ஒருபுறம் நிதானமாக ரன் சேர்க்க, மறுமுனையில் அசத்தலாக ஆடிய ஸ்டீவன் ஸ்மித் 315 பந்துகளில் 150 ஓட்டங்களை எட்டினார். இதனால் ஆஸ்திரேலியா 117.2 ஓவர்களில் 400 ஓட்டங்களைக் கடந்தது.
உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஓ’கீஃப் 25 ஓட்டங்களில் வெளியேற, பின்னர் வந்த நாதன் லயன் 1 ரன்னிலும், ஹேஸில்வுட் ரன் ஏதுமின்றியும் வெளியேறினார்.
ஆஸ்திரேலியா 137.3 ஓவர்களில் 451 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.
ஸ்டீவன் ஸ்மித் 178 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா கடைசி 5 விக்கெட்டுகளை 56 ஓட்டங்களுக்கு இழந்தது.
இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.