ஆர்சிபி அணி வீரரை விலைக்கு வாங்கிய மும்பை இந்தியன்ஸ்!! புதிய வருகையால் ரசிகர்கள் உற்சாகம்

By karthikeyan VFirst Published Oct 20, 2018, 1:36 PM IST
Highlights

2019 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தேர்வு இப்போதே தொடங்கிவிட்டது. 
 

2019 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தேர்வு இப்போதே தொடங்கிவிட்டது. 

கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இந்த 11 சீசன்களில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா மூன்று முறையும் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்(டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ்) அணிகள் தலா இரண்டு முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒருமுறையும் கோப்பையை வென்றுள்ளன.

ஐபிஎல்லில் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய 4 அணிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. பஞ்சாப், பெங்களூரு, டெல்லி ஆகிய அணிகளின் கோப்பை கனவு, ஒவ்வொரு சீசனிலும் வெறும் கனவாகவே போய்விடுகிறது. 

இந்நிலையில் அடுத்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்த மூன்று அணிகளும் உள்ளன. அதற்கான பணிகளில் ஈடுபடவும் தொடங்கிவிட்டன. அடுத்த சீசனுக்கான ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதி நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையே, ஐபிஎல் அணிகள் திருப்பி கொடுக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை வரும் 16ம் தேதிக்குள் கொடுக்குமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் கடந்த சீசனில் 2.8 கோடி ரூபாய் கொடுத்து பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்த தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் குயிண்டன் டி காக்கை அதே விலைக்கு மும்பை அணிக்கு விற்றுள்ளது பெங்களூரு அணி. பெங்களூரு அணிக்காக கடந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடிய டி காக், 201 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஐபில் சராசரி 124.07. 

மும்பை அணியின் தொடக்க வீரராக கடந்த சீசனில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லிவிஸ் பெரிதாக சோபிக்கவில்லை. எனவே தொடக்க வீரராக டி காக்கை இறக்கும் நோக்கில் அவரை எடுத்துள்ளது மும்பை அணி. மும்பை அணியில் இஷான் கிஷான், ஆதித்ய தரே ஆகிய விக்கெட் கீப்பர்களை வைத்துக்கொண்டே டி காக்கையும் மும்பை அணி எடுத்துள்ளது. விக்கெட் கீப்பாராக இல்லாமல் பேட்ஸ்மேன் ஆப்ஷனுக்காக அவர் எடுக்கப்பட்டிருக்கிறார். 

குயிண்டன் டி காக்கை எடுத்துள்ள மும்பை அணி, வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் இலங்கை ஸ்பின்னர் அகிலா தனஞ்செயா ஆகிய இருவரையும் விடுவித்துள்ளது. 
 

click me!