
மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது ராஜஸ்தான் அணி.
தலா 11 போட்டிகளில் ஆடி 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் இருந்த மும்பை அணியும் ராஜஸ்தான் அணியும், பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும் கட்டாயத்தில் நேற்றைய போட்டியில் மோதின.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். மும்பை அணியின் தொடக்க வீரர்கள் சூர்யகுமார் மற்றும் லீவைஸ் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தனர். சூர்யகுமார் 38 ரன்னில் அவுட்டாக, அதற்கு அடுத்த பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ரோஹித்தும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். லீவைஸ் 60 ரன்களிலும் இஷான் கிஷான் 12 ரன்களிலும் வெளியேறினர். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 168 ரன்கள் எடுத்தது.
169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஷார்ட் முதல் ஓவரிலேயே அவுட்டாகி வெளியேறினார். அதன்பிறகு பட்லருடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். ரஹானே நிதானமாக ஆட, பட்லர் அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக 5வது அரைசதத்தை பதிவு செய்த பட்லர், இலக்கை நோக்கி பயணித்தார். ரஹானே 37 ரன்களில் அவுட்டாக, பட்லருடன் சாம்சன் ஜோடி சேர்ந்தார்.
மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கும் பட்லர், மும்பை அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். பட்லரின் அதிரடியால் 18 ஓவரின் முடிவிலேயே இலக்கை எட்டி ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 53 பந்துகளில் 94 ரன்கள் குவித்து பட்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநாயகனாகவும் பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி 5வது இடத்தை பிடித்துள்ளது. மும்பை 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் மும்பை அணி தோல்வியைத் தழுவியதால், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தே மும்பை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.