
பஞ்சாப் அணிக்கு ஏப்ரல் மாதம் நன்றாக அமைந்ததாகவும் மே மாதம் சரியாக அமையவில்லை எனவும் அந்த அணியின் கேப்டன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் லீக் போட்டிகள் முடிவடைந்தன. ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளன. இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றிராத பஞ்சாப் அணி, இந்த முறை கோப்பை கனவுடன் களமிறங்கியது. ஆனால் இந்த முறையும் பிளே ஆஃபிற்கு தகுதி பெறாமலே வெளியேறிவிட்டது.
அஸ்வின் கேப்டன்சியில் இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கிய பஞ்சாப் அணி, இரண்டாம் பாதியில் சொதப்பியதால், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. முதல் 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, கடைசி 8 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்று பிளே ஆஃபிற்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
சென்னைக்கு எதிரான கடைசி போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தால், ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளி பஞ்சாப் பிளே ஆஃபிற்கு சென்றிருக்கும். ஆனால் சென்னையிடம் பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது.
போட்டிக்கு பின்னர் பேசிய பஞ்சாப் கேப்டன் அஸ்வின், ஏப்ரல் மாதம் எங்களுக்கு நன்றாக இருந்தது. ஆனால் மே மாதம் சரியாக அமையவில்லை. அங்கிட் சிறப்பாக பந்துவீசுகிறார். கே.எல்.ராகுல் இந்த சீசன் முழுவதும் அபாரமாக பேட்டிங் செய்தார். எங்கள் அணியின் டாப் ஆர்டர்கள் நன்றாக ஆடினார்கள். மிடில் ஆர்டர் பேட்டிங்தான் சிறப்பாக அமையவில்லை. அதனால்தான் இரண்டாம் பாதியில் தொடர் தோல்விகளை சந்திக்க நேரிட்டது. எங்கள் அணி பவுலர் ஆண்ட்ரூ டை தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ராகுல் சிறப்பாக பேட்டின் செய்தார். இப்படி நல்ல வீரர்களை பெற்றிருந்தும், சிறப்பாக செயல்படவில்லை. பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விதான் ரன்ரேட்டில் மட்டுமல்லாமல் மனதளவிலும் எங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என அஸ்வின் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.