ஒற்றை கேட்ச்சில் மைதானத்தையே மிரட்டிய மனீஷ் பாண்டே!! ஸ்டிரைட்டா ஸ்டம்பில் அடித்த ராயுடு.. பதற்றத்தில் பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Sep 19, 2018, 8:07 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி திணறிவருகிறது.
 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி திணறிவருகிறது.

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இதில் நேற்று ஹாங்காங் அணியை வீழ்த்திய இந்திய அணி இன்று பாகிஸ்தானுடன் ஆடிவருகிறது. ஓராண்டுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் இந்த போட்டியை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியிருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்கத்திலேயே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்தார் புவனேஷ்வர் குமார். பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக்கை 2 ரன்னிலும் ஃபகார் ஜமானை ரன் ஏதும் எடுக்கவிடாமலும் வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார்.

இதையடுத்து 3 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி திணறியது. அதன்பிறகு ஜோடி சேர்ந்த பாபர் அசாம் மற்றும் ஷோயப் மாலிக் ஜோடி, அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. இருவரும் நிதானமாகவும் அதேநேரத்தில் ரன்களை சேர்த்தும் ஆடினர். எனினும் இவர்கள் பார்ட்னர்ஷிப் நிலைக்கவில்லை. மூன்றாவது விக்கெட்டுக்கு 82 ரன்களை சேர்த்த இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். பாபர் அசாமை 47 ரன்களில் போல்டாக்கி அனுப்பினார் குல்தீப்.

அதன்பிறகு ஷோயப் மாலிக்குடன் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது ஜோடி சேர்ந்தார். கேதர் ஜாதவ் வீசிய பந்தை சர்ஃபராஸ் தூக்கி அடிக்க, பவுண்டரி லைனில் நின்ற மனீஷ் பாண்டே பந்தை கேட்ச் செய்தார். எனினும் கட்டுப்பாட்டை இழந்து பவுண்டரி லைனை மிதிக்க நேர்ந்ததால் பந்தை தூக்கி போட்டுவிட்டு மீண்டும் பவுண்டரி லைனிலிருந்து வெளியே வந்து கேட்ச் செய்தார். மனீஷ் பாண்டேவின் அபாரமான கேட்ச்சால் 6 ரன்களில் வெளியேறினார் சர்ஃபராஸ்.

இதையடுத்து நேரடியாக ஸ்டம்பில் அடித்து ஷோயப் மாலிக்கை ராயுடு ரன் அவுட் செய்தார். களத்தில் நிலைத்து நின்ற மாலிக்கை ரன் அவுட் செய்து 43 ரன்களில் வெளியேற்றினார் ராயுடு. இதைத்தொடர்ந்து ஆசிஃப் அலி மற்றும் ஷதாப் கான் ஆகிய இருவரும் முறையே 9 மற்றும் 8 ரன்களில் அவுட்டாகினர்.

ஃபஹீம் அஷ்ரப்பும் முகமது ஆமீரும் ஜோடி சேர்ந்து நிதானமாக ரன்களை சேர்த்தனர். ஆனால் இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஃபஹீமை 21 ரன்களில் பும்ரா வீழ்த்தினார். 

click me!