
ராட்டெர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் குரோஷியாவின் மரின் சிலிச், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
நெதர்லாந்தின் ராட்டெர்டாம் நகரில் நடைபெற்று வரும் ராட்டெர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் மரின் சிலிச் 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான போர்னா கோரிச்சை தோற்கடித்தார்.
வெற்றி குறித்துப் பேசிய மரின் சிலிச், "எப்போதுமே சகநாட்டவருடன் விளையாடுவது மிகக் கடினமானது. காயத்திலிருந்து மீண்டுள்ள போர்னா கோரிச் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை நான் எளிதாக கைப்பற்றினேன். ஆனால் அடுத்த செட்டில் அபாரமாக ஆடிய போர்னா கோரிச், ஆட்டத்தை சவால் மிக்கதாக மாற்றிவிட்டார்.
போர்னா கோரிச், தன்னை அடுத்த தலைமுறையின் சிறந்த வீரர் என்பதை நிரூபித்துவிட்டார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சீசன் அவருக்கு சிறப்பாக அமையாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்' என்றுத் தெரிவித்தார்.
மற்றொரு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் 7-6 (4), 6-1 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டை தோற்கடித்தார்.
போட்டித் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்தின் டேவிட் கோபின் 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
போட்டித் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 7-6 (7), 6-1 என்ற நேர் செட்களில் உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.