டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகப்பெரிய படுதோல்வி இதுதான்!! நியூசிலாந்து அபார வெற்றி

By karthikeyan VFirst Published Feb 6, 2019, 4:01 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியடைந்துள்ளது. 
 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியடைந்துள்ளது. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி வெலிங்டனில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி, பவுலிங் தேர்வு செய்ததால் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது. 

220 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, 1 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து தவானுடன் விஜய் சங்கர் ஜோடி சேர, இருவரும் அடித்து ஆடி ரன்களை குவித்து வந்த நிலையில், தவான் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து விஜய் சங்கருடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட், களத்திற்கு வந்தது முதலே திணறினார். 10 பந்துகளில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து சாண்ட்னெரின் சுழலில் கிளீன் போல்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து விஜய் சங்கர் 27 ரன்களில் வெளியேற, அதன்பிறகு தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா என அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது. 

தோனியும் குருணல் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து ஓரளவிற்கு ஆடினாலும், இலக்கை விரட்டும் அளவிற்கு அதிரடியாக ஆடவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய அணி இனிமேல் வெற்றி பெற வாய்ப்பில்லை என்ற நிலை உருவானது. குருணல் பாண்டியா, புவனேஷ்வர் குமார், தோனி ஆகியோர் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் சாஹல் ஆட்டமிழந்தார். இந்திய அணி 19.2 ஓவரில் 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதுதான் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி அடைந்திருக்கும் மிகப்பெரிய படுதோல்வி. இதற்கு முன்னதாக இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றதில்லை. இந்திய அணியை அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெருமையை பெற்றுள்ளது நியூசிலாந்து அணி. இந்த வெற்றியை அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகனாக டிம் சேஃபெர்ட் தேர்வு செய்யப்பட்டார். 
 

click me!