தேசிய கூடைப்பந்து: ஆடவருக்கு ஐஓபி; மகளிருக்கு செகந்திரபாத் சாம்பியன் வென்று அசத்தல்…

First Published Jun 1, 2017, 11:04 AM IST
Highlights
National basketball iob or the men sekandrabad for women


தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் ஆடவர் பிரிவில் ஐஓபி அணியும், மகளிர் பிரிவில் செகந்திராபாத் - தெற்கு மத்திய ரயில்வே அணியும் வாகைச் சூடின.

கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சி. மைதானத்தில் 52-ஆவது ஆடவர் நாச்சிமுத்து கௌண்டர் நினைவுக் கோப்பை, 16-ஆவது மகளிர் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டிகள் கடந்த 26-ஆம் தேதி தொடங்கின.

இதில், இறுதி ஆட்டத்தை கோவை சக்தி குழுமத் தலைவர் எம்.மாணிக்கம் தொடக்கி வைக்க நேற்று நடைபெற்ற ஆடவர் இறுதி ஆட்டத்தில் சென்னை வருமான வரித் துறை அணியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும் எதிர்கொண்டன.

இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 82 - 72 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை வருமான வரித் துறை அணியை வீழ்த்தி வாகைச் சூடியது.

ஆடவர் பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்கு ரூ.1 இலட்சத்துடன் நாச்சிமுத்து கௌண்டர் சுழற்கோப்பையும், இரண்டாவது இடம் பிடித்த சென்னை வருமான வரித் துறை அணிக்கு ரூ.50 ஆயிரத்துடன் நா.மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட்டன.

அதேபோன்று மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செகந்திராபாத் - தெற்கு மத்திய ரயில்வே அணி 83 - 57 என்ற புள்ளிகள் கணக்கில் சத்தீஸ்கர் மாநில அணியை வீழ்த்தி வாகைச் சூடியது.

மகளிர் பிரிவில் வெற்றி பெற்ற செகந்திராபாத் - தெற்கு மத்திய ரயில்வே அணிக்கு ரூ.50 ஆயிரத்துடன் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற்கோப்பையும், இரண்டாவது இடம் பிடித்த சத்தீஸ்கர் மாநில அணிக்கு ரூ.25 ஆயிரத்துடன் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டன.

மகளிர் பிரிவில், சத்தீஸ்கர் மாநில அணியைச் சேர்ந்த மேகா சிங் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இறுதி ஆட்டத்தில் வென்ற அணிகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் கோப்பைகளை வழங்கினார்.

பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன், மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவர் ஜி.செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

tags
click me!