
3 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற மும்பை அணி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரு ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு போராடிவருகின்றன.
இந்நிலையில், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். மும்பை அணியின் தொடக்க வீரர் லெவிஸ் 9 ரன்களில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷானும் சூர்யகுமாரும் ஆண்ட்ரூ டையின் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினர். வழக்கம்போலவே ரோஹித் சர்மா ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்.
குருணல் பாண்டியா - பொல்லார்டு ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது. இந்த தொடர் தொடங்கியதிலிருந்து சரியாக ஆடாத பொல்லார்டு, 22 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஆனால் 50 ரன்களிலேயே வெளியேறினார். குருணல் பாண்டியா 32 ரன்களில் வெளியேறினார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 186 ரன்கள் குவித்தது.
187 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கெய்ல், 18 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து மற்றொரு தொடக்க வீரரான ராகுலுடன் ஃபின்ச் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது. 2வது விக்கெட்டுக்கு 111 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். 46 ரன்களில் ஃபின்ச்சை வீழ்த்தினார் பும்ரா. அதே ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸையும் வீழ்த்தினார்.
கடைசி இரண்டு ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவை. 19வது ஓவரை வீசிய பும்ரா, அதிரடியாக ஆடி வெற்றியை நோக்கி பஞ்சாப் அணியை இழுத்து சென்ற ராகுலை 94 ரன்களில் வீழ்த்தினார். மேலும் அந்த ஓவரில் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதையடுத்து கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவை. கடைசி ஓவரை மெக்லனகன் வீசினார். இந்த ஓவரின் மூன்றாவது பந்தில் யுவராஜ் சிங் அவுட்டானார். கடைசி ஓவரில் பஞ்சாப் அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளை பெற்றுள்ள மும்பை அணி, நான்காவது இடத்திற்கு முன்னேறி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. மும்பை அணிக்கு இன்னும் ஒரு போட்டி உள்ளது. டெல்லி அணியுடனான அந்த போட்டியிலும் மும்பை வென்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.
வெற்றிகரமாக இந்த சீசனை தொடங்கிய பஞ்சாப் அணி, மும்பைக்கு எதிரான தோல்வியை அடுத்து, புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு சென்றுவிட்டது. பிளே ஆஃப் சுற்றுக்கு போட்டிபோடும் அணிகளில் மும்பை அணியின் நெட் ரன்ரேட் மட்டுமே பிளஸ்ஸில் உள்ளதால் பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை அணி செல்வதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.