எம்சிசி - முருகப்பா ஹாக்கி: வாகைச் சூடி ரூ.5 இலட்சம் வென்றது ஓஎன்ஜிசி அணி…

First Published Aug 7, 2017, 9:37 AM IST
Highlights
MCC - Murugappa Hockey ONGC Team wins 5 lakhs


எம்சிசி மற்றும் முருகப்பா தங்கக் கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியில் பெங்களூரு ஹாக்கி அணியை வீழ்த்தி ஓஎன்ஜிசி அணி வாகைச் சூடி அசத்தியது.

91-வது எம்சிசி மற்றும் முருகப்பா தங்கக் கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதன் இறுதிச் சுற்றில் ஓஎன்ஜிசி அணியும், பெங்களூரு ஹாக்கி அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் ஓஎன்ஜிசி வீரர் திவாகர் ராம் கோலடிக்க, 5-வது நிமிடத்தில் ராஜ்குமார் பால் மூலம் பதிலடி கொடுத்தது பெங்களூரு.

இதன்பிறகு 13-வது நிமிடத்தில் பிஜு இர்கால் கோலடிக்க, பெங்களூரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து 28-வது நிமிடத்தில் ஓஎன்ஜிசி வீரர் மன்தீப் அந்தில் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் சமன் அடைந்தன.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் போராட, 52-வது நிமிடத்தில் மச்சையா கோலடிக்க, ஓஎன்ஜிசி அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

பெங்களூரு அணி சரிவிலிருந்து மீள போராடியபோதும் கடைசி வரை முடியவில்லை. அதேநேரத்தில் கடைசி நிமிடத்தில் மச்சையா இன்னொரு கோலை அடிக்க, ஓஎன்ஜிசி அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று வாகைச் சூடியது.

கோப்பையை வென்ற ஓஎன்ஜிசி அணிக்கு ரூ.5 இலட்சமும், 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.2.5 இலட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.

சிறந்த முன்கள வீரராக ஜென்ஜென் சிங்கும் (பெங்களூரு), சிறந்த மிட்பீல்டராக மச்சையாவும் (ஓஎன்ஜிசி), சிறந்த பின்கள வீரராக திவாகர் ராமும் (ஓஎன்ஜிசி), நம்பிக்கைக்குரிய வீரராக சஞ்சய் ஸால்úஸாவும் (பெங்களூரு) தேர்வு செய்யப்பட்டனர்.

ஆட்டநாயகன் விருதை பெங்களூரு வீரர் ராஜ்குமார் பால் தட்டிச் சென்றார். பெங்களூரு வீரர் ரகுநாத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இவர்கள் அனைவருக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசுடன், டிஐ சைக்கிள்ஸ் சார்பில் தலா ஒரு சைக்கிளும் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவில் முருகப்பா குழும தலைவர் ஏ.வெள்ளையன் பங்கேற்று கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார்.

tags
click me!