ஒரே போட்டியில் ஒரே மாதிரியான 2 கேட்ச்கள்!! மும்பையை விரட்டியடித்த மேக்ஸ்வெல்-போல்ட் கூட்டணி

First Published May 21, 2018, 4:06 PM IST
Highlights
maxwell and boult amazing catches defeats mumbai indians


மும்பைக்கு எதிரான போட்டியில், பொல்லார்டையும் ரோஹித்தையும் ஒரே மாதிரியான கேட்ச்சைப் பிடித்து வீழ்த்தியது மேக்ஸ்வெல் - டிரெண்ட் போல்ட் கூட்டணி.

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் லீக் போட்டிகள் நிறைவடைந்தன. ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுவிட்டன. 

டெல்லிக்கு எதிரான போட்டியில் வென்றால், பிளே ஆஃபிற்கு தகுதி பெறலாம் என்ற நிலையில், டெல்லியுடன் நேற்று மும்பை அணி மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, ரிஷப் பண்ட் மற்றும் விஜய் சங்கரின் அதிரடி பேட்டிங்கால் 174 ரன்களை குவித்தது.

175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, இலக்கை எட்ட முடியாமல் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி பிளே ஆஃப் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டது. இந்த போட்டியில் பொல்லார்டு மற்றும் ரோஹித் சர்மாவின் கேட்ச்களை மேக்ஸ்வெல்-போல்ட் கூட்டணி ஒரே மாதிரி பிடித்து அசத்தியது. இந்த விக்கெட்டுகள் டெல்லி அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தன.

மும்பை அணி பேட்டிங் செய்த போது, சந்தீப் லாமிசானே வீசிய 9வது ஒவரின் முதல் பந்தை, பொல்லார்டு சிக்ஸருக்கு அடிக்க முயன்றார். பொல்லார்டு தூக்கி அடித்த பந்தை எல்லைக் கோட்டு அருகே நின்றிருந்த மேக்ஸ்வெல், பந்தை பிடிக்கும்போது, நிலை தடுமாறி எல்லைக்கோட்டிற்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சூழலிலும் பந்தை அருகே இருந்த சக வீரர் போல்ட்டிடம் தூக்கி வீசினார். அதை போல்ட் பிடித்ததால் பொல்லார்டு அவுட்டானார்.

அதேபோல் 14வது ஓவரின் 4வது பந்தை ரோஹித் தூக்கி அடிக்க, அதையும் மேக்ஸ்வெல் பிடித்தார். ஆனால், அப்போதும் நிலை தடுமாறி எல்லைக்கோட்டிற்குள் செல்ல நேர்ந்தது. எனவே எல்லைக்கோட்டிற்குள் செல்வதற்கு முன்பாக பந்தை அருகே இருந்த போல்ட்டிடம் தூக்கி வீசினார். இதையும் போல்ட் பிடித்துவிட்டார். ரோஹித் வெளியேறினார். 

பொல்லார்டு மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இரண்டு அபாயகரமான வீரர்களையும் நேர்த்தியான மற்றும் சமயோசித ஃபீல்டிங்கால் மேக்ஸ்வெல்-போல்ட் கூட்டணி வெளியேற்றி, வெற்றியை பறித்தது. மும்பையையும் பிளே ஆஃபிற்கு தகுதி பெறவிடாமல் தடுத்துவிட்டது. 
 

click me!