கடமையை உணர்ந்து ஆடும் கவாஜா.. 5வது விக்கெட்டை வீழ்த்த போராடும் இந்தியா!! வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

By karthikeyan VFirst Published Dec 17, 2018, 10:16 AM IST
Highlights

நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியதும் கவாஜவும் டிம் பெய்னும் களமிறங்கினர். இன்றும் இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. முதல் போட்டி மற்றும் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆகிய மூன்று இன்னிங்ஸ்களிலும் சரியாக ஆடாத கவாஜா, இந்த இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

முதல் 3 இன்னிங்ஸ்களில் சரியாக ஆடாத உஸ்மான் கவாஜா, இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிவருகிறார். அவரும் டிம் பெய்னும் இணைந்து ஆஸ்திரேலிய அணியை வலுவான முன்னிலையை நோக்கி அழைத்து செல்கின்றனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறிவருகிறது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பெர்த்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, விராட் கோலியின் அபார சதம் மற்றும் ரஹானேவின் பொறுப்பான அரைசதத்தால் 283 ரன்கள் சேர்த்தது. 

43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகிய இருவரும் சிறப்பாக தொடங்கினர். ஷமியின் பந்துவீச்சில் கையில் காயமடைந்து ஃபின்ச் ரிட்டயர்டு ஹர்ட் ஆகி வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து ஷான் மார்ஷை 5 ரன்களில் ஷமி அவுட்டாக்கினார். அதன்பிறகு பெரிய பார்ட்னர்ஷிப் எதையும் அமைக்கவிடாத இந்திய பவுலர்கள், மார்கஸ் ஹாரிஸ், ஹேண்ட்ஸ்கம்ப் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரை அவுட்டாக்கி அனுப்பினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த கவாஜாவுடன் கேப்டன் டிம் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை பறிகொடுத்து விடாமல் மூன்றாம் நாளை முடித்தது. நேற்றைய மூன்றாம் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. 

இதையடுத்து நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியதும் கவாஜவும் டிம் பெய்னும் களமிறங்கினர். இன்றும் இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. முதல் போட்டி மற்றும் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆகிய மூன்று இன்னிங்ஸ்களிலும் சரியாக ஆடாத கவாஜா, இந்த இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி அரைசதத்தை பூர்த்தி செய்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து கேப்டன் டிம் பெய்னும் சிறப்பாக ஆடிவருகிறார். 

நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை இந்திய பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை குவித்துள்ளது. ஏற்கனவே 43 ரன்கள் முன்னிலையில் இருந்ததால் இதுவரை 233 ரன்கள் முன்னிலை வகிக்கிறது ஆஸ்திரேலிய அணி. கவாஜா 67 ரன்களுடனும் டிம் பெய்ன் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அந்த அணி பெரிதும் நம்பியிருந்த உஸ்மான் கவாஜா சிறப்பாக ஆடிவருவது அந்த அணிக்கு கூடுதல் பலம். இந்த போட்டியில் மட்டுமல்லாது அடுத்தடுத்த போட்டிகளிலும் இது பெரிய பலமாக அமையும். 
 

click me!