அதிக விலைக்கு ஏலம் போன இந்திய பவுலர்!! வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரை அடித்து தூக்கிட்டு முதலிடத்தை பிடித்த சுவாரஸ்யம்

By karthikeyan VFirst Published Dec 18, 2018, 4:52 PM IST
Highlights

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கத், அதிக விலைக்கு ஏலம் போயுள்ளார். 

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கத், அதிக விலைக்கு ஏலம் போயுள்ளார். ஏலத்தின் முதல் ஒன்றே கால் மணி நேர நிலவரப்படி, உனாத்கத் தான் அதிக விலைக்கு ஏலம்போன வீரர். இவருக்கு முன்னதாக அதிகவிலைக்கு ஏலம்போன வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பிராத்வெயிட்டை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் உனாத்கத்.

ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் நடந்துவருகிறது. மெக்கல்லம், யுவராஜ் சிங், கிறிஸ் வோக்ஸ், மார்டின் கப்டில், அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற வீரர்களை அடிப்படை விலைக்குக்கூட எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. அதேநேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அதிக டிமேண்ட் இருந்தது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் அதிரடி வீரர் ஹெட்மயரை ரூ.4.20 கோடிக்கு ஆர்சிபி அணி எடுத்தது. இவருக்குத்தான் அதிக கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் கழட்டிவிடப்பட்ட பிராத்வெயிட்டை எடுப்பதில் அணிகள் ஆர்வம் காட்டின. இறுதியில் 5 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை எடுத்தது. முதல் ஒரு மணி நேரத்தில் அதிக விலைக்கு இவர்தான் ஏலத்தில் எடுக்கப்பட்டவர். 

இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் கழட்டிவிடப்பட்ட ஜெய்தேவ் உனாத்கத் ஏலத்தில் விடப்பட்டார். இவரை எடுப்பதில் சென்னை, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் ஆர்வம் காட்டின. பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், கழட்டிவிட்ட ராஜஸ்தான் அணியே 8.4 கோடி ரூபாய்க்கு உனாத்கத்தை எடுத்தது. இதையடுத்து இவர்தான் இதுவரையிலான ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்டவர். கடந்த சீசனில் இவரை 11.5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 

click me!