
நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இதில் மும்பை அணியின் பேட்டிங்கின்போது, ஒரே ஓவரில் ஆட்டத்தின் போக்கே மாறியது. குல்தீப் வீசிய அந்த ஓவரை அடித்து நொறுக்கினார் இஷான் கிஷான்.
மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
ரோஹித் மூன்றாவதாக களமிறங்க, சூர்யகுமார் 9வது ஒவரில் அவுட்டான பிறகு இஷான் கிஷான் களமிறங்கினார். முதல் 10 ஓவருக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்களை மட்டுமே மும்பை அணி எடுத்திருந்தது.
அதன்பிறகு இஷான் கிஷான் அதிரடியில் மிரட்டினார். குல்தீப் யாதவ் வீசிய 10வது ஓவரில் ஒரு சிக்ஸர், சாவ்லா வீசிய 11வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் என அசத்தலாக ஆடினார் இஷான். 13 ஓவருக்கு மும்பை அணி 112 ரன்கள் எடுத்திருந்தது. குல்தீப் யாதவ் வீசிய 14வது ஓவரை, யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அடித்து நொறுக்கிவிட்டார் இஷான் கிஷான். குல்தீப் வீசிய அந்த ஓவரில் அடுத்தடுத்து வரிசையாக 4 சிக்ஸர்களை விளாசினார். 17வது பந்தில் அரைசதத்தையும் கடந்தார்.
இந்த ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. மும்பை அணியின் ரன் வேகத்தை உயர்த்தியது. அந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள். 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் விளாசி, ஈடன் கார்டன் மைதானத்தையே அதிரவிட்டார் இஷான் கிஷான்.
21 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து இஷான் அவுட்டானார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 210 ரன்கள் எடுத்தது. 211 ரன்கள் என்ற கடின இலக்கை எட்ட முடியாமல் 108 ரன்களுக்கே கொல்கத்தா அணி ஆல் அவுட்டானது. இதையடுத்து மும்பை அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போக்கையே மாற்றியது இஷான் கிஷான் அடித்த அந்த ஒரு ஓவர்தான். இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக இது அமைந்தது.
டெல்லிக்கு எதிராக 14 பந்துகளில் ராகுல் அரைசதம் கடந்தது, டிவில்லியர்ஸின் 39 பந்துகளுக்கு 90 ரன்கள் ஆகிய இன்னிங்ஸ்கள் இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த இன்னிங்ஸ்களாக இருந்தது. ஆனால் நேற்றைய போட்டியில் இஷான் கிஷானின் ஆட்டம், இவற்றையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு இருந்தது.
அதிரடியால் எதிரணியை நிலைகுலைய வைத்த இஷான் கிஷான், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.