முத்தரப்பு டி 20 கிரிக்கெட்  போட்டிகள் ….மெர்சல் காட்டிய இந்திய அணி…திரில் வெற்றி !! 

First Published Mar 19, 2018, 6:36 AM IST
Highlights
indian win t traglar t 20 cricket in srilanga


நிதாஹாஸ் முத்தரப்பு டி 20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில்  வங்காள தேச அணியை வீழ்த்தி இந்திய அணி சாட்பியன் பட்டத்தை வென்றது.

இலங்கையில் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இலங்கை அணியை  வெளுத்து வாங்கி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வங்கதேச அணியுடன் இந்திய அணி நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய  அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் சிராஜ் நீக்கப்பட்டு உனத்கட் சேர்க்கப்பட்டுள்ளார். வங்காள தேச அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி முதல் மூன்று ஓவரில் 26  ரன்கள் எடுத்திருந்தது. 4-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் லித்தோன் தாஸ் ஆட்டமிழந்தார். அவர் 9 பந்தில் 11 ரன்கள் சேர்த்தார். சுந்தர் இந்த ஓவரில் ஒரு ரன் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அடுத்த ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரில் சாஹல் தமிம் இக்பாலையும், சவுமியா சர்காரையும் வீழ்த்தினார். இதனால் வங்காள தேசத்தின் ரன் வேகத்தில் மந்தநிலை ஏற்பட்டது.

3-வது வீரராக களம் இறங்கிய சபீர் ரஹ்மான் மட்டும் சிறப்பாக விளையாடினார். மெஹ்முதுல்லா 21 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். சபிர் ரஹ்மான் 37 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய சபிர் ரஹ்மான் 50 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதில் வங்காள தேசம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். தவான் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் ரோகித் சர்மா உடன், கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். 

இந்த ஜோடி 51 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ராகுல் ஆட்டமிழந்தார். அவர் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து ரோகித் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் நிதானமாக விளையாடி வந்த ரோகித் சர்மா 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். ரோகித் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் தமிழக வீரர் விஜய் சங்கர் களமிறங்கினார். இதுவே சர்வதேச போட்டிகளில் விஜய் சங்கர் பேட்டிங் பிடிக்கும் முதல் தடவையாகும். 

மணிஷ் பாண்டே 27 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். ஒரு கட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 2 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக் அதிரடியில் இறங்கினார். 19-வது ஓவரில் பேட்டிங் பிடித்த தினேஷ் கார்த்திக், இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரி, ஒரு இரண்டு ரன் உட்பட 22 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. முதல் மூன்று பந்துகளில் இந்திய அணிக்கு 3 ரன்கள் கிடைத்தது. நான்காவது பந்தை விஜய் சங்கர் பவுண்டரிக்கு அனுப்பினார். ஐந்தாவது பந்தில் அவர் கேட்ச் ஆகி வெளியேறினார். இறுதி பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தில் பேட்டிங் பிடித்த தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்தார்.

இதன்மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 29 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார்.

click me!