
World Athletics Continental Tour Athletics Competition In India: இந்திய தடகள விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக உலக தடகளக் கண்டெண்டல் டூர் (World Athletics Continental Tour) போட்டியை இந்தியா முதல் முறையாக நடத்த உள்ளது. வரும் ஆகஸ்ட் 10ம் தேதி அன்று ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற உள்ளது. உலகத் தடகளக் கூட்டமைப்பு (World Athletics) நடத்தும் இந்த சர்வதேச போட்டி, இந்தியாவில் தடகளத்தின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கும்.
கண்டெண்டல் டூர் போட்டி என்றால் என்ன?
கண்டெண்டல் டூர் என்பது உலக தடகளப் போட்டிகளில் இரண்டாவது பெரிய சர்வதேச போட்டியாகும். இது டயமண்ட் லீக் போட்டிக்கு அடுத்த இடத்தில் உள்ளது. கண்டெண்டல் டூர் போட்டிகள் தங்கம், வெள்ளி வெண்கலம், மற்றும் சேலஞ்சர் என நான்கு நிலைகளில் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இப்போது நடைபெறவுள்ள போட்டி வெண்கல (Bronze) நிலை போட்டியாகும். இந்த போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் போன்ற பெரிய போட்டிகளுக்குத் தகுதி பெறுவதற்கான உலக தரவரிசைப் புள்ளிகள் கிடைக்கும்.
போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் யார்? யார்?
கண்டெண்டல் டூர் போட்டியில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற நீரஜ் சோப்ரா, நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் உள்ளிட்ட முன்னணி இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குத் தயாராகும் வகையில், பல முன்னணி வெளிநாட்டு வீரர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
கண்டெண்டல் டூர் போட்டியில் என்னென்ன பிரிவுகள்?
ஆண்கள் பிரிவை பொறுத்தவரை 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500மீ, 5000மீ ஓட்டப்பந்தயங்கள், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் 4x400மீ தொடர் ஓட்டம் ஆகியவை நடைபெறும். பெண்கள் பிரிவை பொறுத்தவரை 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500மீ ஓட்டப்பந்தயங்கள், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் மற்றும் 4x400மீ தொடர் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.
கண்டெண்டல் டூர் போட்டியால் கிடைக்கும் நன்மைகள்
கண்டெண்டல் டூர் போட்டி, இந்திய வீரர்களுக்கு சொந்த மண்ணிலேயே தரவரிசைப் புள்ளிகளைப் பெறுவதற்கான அரிய வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம், அவர்கள் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று புள்ளிகளைப் பெற வேண்டிய அவசியம் குறைகிறது. மேலு உலகின் முன்னணி வீரர்களுடன் சொந்த மண்ணில் போட்டியிடும் வாய்ப்பு கிடைப்பதால் இந்திய இளம் வீரர்களின் தன்னம்பிக்கையையும் திறமையையும் வளர்க்க மிகவும் உதவும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.