நாதன் லயனிடம் சரணடைந்த இந்தியா!! பவுலர்களின் கையில் இந்தியாவின் வெற்றி

By karthikeyan VFirst Published Dec 9, 2018, 9:35 AM IST
Highlights

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 323 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
 

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 323 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் போட்டி அடிலெய்டில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

15 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்திருந்தது. புஜாராவும் ரஹானேவும் களத்தில் இருந்தனர். நான்காம் நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் நிதானமாக நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர். நான்காவது விக்கெட்டுக்கு 87 ரன்களை சேர்த்தனர். வேகப்பந்து வீச்சை இருவரும் தெளிவாக ஆடினாலும் நாதன் லயன் ஸ்பின்னில் திணறினர். லயனின் ஸ்பின்னை சமாளித்து ஆடிவந்தனர். எனினும் அரைசதம் கடந்து சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருந்த புஜாராவை 71 ரன்களில் வெளியேற்றினார் லயன்.

அதன்பிறகு களத்திற்கு வந்த ரோஹித் சர்மா வெறும் ஒரு ரன்னில் வெளியேறினார். இதற்கிடையே அரைசதம் கடந்த ரஹானேவுடன் ரோஹித்தின் விக்கெட்டுக்கு பிறகு ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். களமிறங்கியது முதலே அடித்து ஆடிய ரிஷப் பண்ட் நான்காம் நாள் உணவு இடைவேளைக்கு பின் லயனின் சுழலில் வீழ்ந்தார். 16 பந்துகளில் 28 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். நாதன் லயனிடம் அவுட்டான ஓவருக்கு முந்தைய அவரது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து மிரட்டினார். ஆனால் அதற்கு அடுத்த லயனின் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

இதையடுத்து அஷ்வின்(5), ரஹானே(70), ஷமி(0) என அடுத்தடுத்து இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தனர். ரஹானே  மற்றும் ஷமியை லயனும் கடைசி விக்கெட்டாக இஷாந்த் சர்மாவை ஸ்டார்க்கும் வீழ்த்தினர். 248 ரன்களுக்கு 5வது விக்கெட்டை இழந்த இந்திய அணி, 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நாதன் லயனின் சுழலில் சிக்கி இந்திய வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.

கோலி, புஜாரா, ரோஹித், ரஹானே, ரிஷப் பண்ட், ஷமி ஆகிய 6 விக்கெட்டுகளை நாதன் லயன் வீழ்த்தினார். இதில் ஷமியை தவிர மற்ற 5 விக்கெட்டுகளும் மிக முக்கியமான விக்கெட்டுகள்.

இந்திய அணி 307 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஆல் அவுட்டானதை அடுத்து 322 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. 323 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது. 323 ரன்கள் என்பது பெரிய இலக்கு இல்லை என்பதால் பவுலர்களின் கையில்தான் இந்திய அணியின் வெற்றி இருக்கிறது.

click me!