ரோகித், கோலி மோசமான பேட்டிங்; பண்ட்டின் தவறான ஷாட்; 4வது டெஸ்ட்டில் இந்தியா படுதோல்வி!

By Rayar r  |  First Published Dec 30, 2024, 12:28 PM IST

 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ரோகித் சர்மா, விராட் கோலியின் மோசமான பேட்டிங்கும், ரிஷப் பண்ட்டின் தவறான ஷாட்டும் இந்திய அணி தோல்வி அடைய காரணமாகி விட்டது. 
 


இந்தியா-ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் 

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டீவ் ஸ்மித் அதிரடி சதம் (140 ரன்கள்) அடித்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நிதிஷ் குமார் ரெட்டி சூப்பர் சதம் (114 ரன்) விளாசினார். 

Tap to resize

Latest Videos

பின்பு 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மார்னஸ் லபுஸ்சேன் (70 ரன்), பேட் கம்மின்ஸ் (41), நாதன் லயன் (41) ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். இதன்பிறகு 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2வது இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கியது.

ரோகித் சர்மா, கோலி மோசம் 

தொடக்கத்தில் சுதாரித்து ஆடிய ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் அதிக பந்துகளை அடிக்காமல் விட்டனர். ஆனாலும் ஆஸ்திரேலிய பவுலர்கள் மனம் தளராமல் சரியான லைன் அண்ட் பந்துகளை வீசி நெருக்கடி கொடுத்தனர். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. ஸ்கோர் 16.1 ஓவரில் 25 ஆக உயர்ந்தபபோது ரோகித் சர்மா கம்மின்ஸ் வீசிய பந்தை லெக் சைடில் அடிக்கபோய், அது பேட்டின் விளிம்பில் உரசிக்கொண்டு கவாஜா கையில்  தஞ்சம் அடைந்தது. 40 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 9 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் அதே கம்மின்ஸ் ஓவரில் டக் அவுட் ஆனார். கே.எல்.ராகுல் பந்தை அடிக்கமால் பேட்டை உள்நோக்கி கொண்டு சென்றபோது பந்து தானாக பேட்டில் உரசி கவாஜா கையில் கேட்ச் ஆனது. பின்னர் களம் கண்ட விராட் கோலியும் 5 ரன்னில் ஸ்டார்க் பந்தில் கேட்ச் ஆனார். அவுட் ஆப் ஸ்டெம்புக்கு வெளியே எங்கேயோ சென்ற பந்தை தேவையில்லாமல் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை 

இதனால் இந்திய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து பரிதவித்தது. ஒருபக்கம் விக்கெட் இழந்தாலும் மறுபக்கம் ஜெய்ஸ்வால் மிகச்சிறப்பாக விளையாடினர். அவருடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக ஆடினார். இருவரும் ஜோடியாக 90 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த டெஸ்ட் டிராவில் முடியும் என இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலிய ரசிகர்களே நினைத்தனர்.

ஆஸ்திரேலிய பேட் கம்மின்ஸூம் இதை மனதில் வைத்து பார்ட் டைம் பவுலரான டிராவிஸ் ஹெட்டுக்கு ஓவர் கொடுத்தார். ஆனால் ஸ்கோர் 121 ஆக உயர்ந்தபோது ரிஷப் பண்ட் அடித்த ஒரு தவறான ஷாட் ஆட்டத்தின் திசையையே மாற்றி விட்டது. அதாவது பார்ட் டைம் பவுலர் டிராவிஸ் ஹெட் வீசிய ஷாட் பிட்ச் பந்தை ரிஷப் பண்ட் சிக்சருக்கு ஆசைப்பட்டு தேவையில்லாமல் தூக்கி அடித்ததால் அது மார்ஷின் கையில் தஞ்சம் புகுந்தது. 

ஜெய்ஸ்வால் அவுட் சர்ச்சை 

அதுவரை பொறுமையாக ஆடிய ரிஷப் பண்ட் அந்த தவறான ஷாட்டை அடித்து 30 ரன்களில் வெளியேறியது இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணமாகி விட்டது. இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாகும். இதன்பின்னர் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸ் சத நாயகன் நிதிஷ் குமார் ரெட்டி (2 ரன்), அதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஜெய்ஸ்வால் (84 ரன்) சர்ச்சைகுரிய முறையில் அவுட் என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்ததால் இந்தியா தோல்வி பாதையை நோக்கி சென்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் அவ்வளவுதான் 

பின்பு கடைநிலை வீரர்கள் ஆகாஷ் தீப் (7 ரன்), பும்ரா (0), சிராஜ் (0) என அடுத்தடுத்து அவுட் ஆனதால் இந்திய அணி வெறும் 155 ரன்களுக்கு சுருண்டு 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஒரு கட்டத்தில் 121/3 என்று நல்ல நிலையில் இருந்த இந்திய அணி ரிஷப் பண்ட்டின் தவறான ஷாட்டால் அடுத்த 34 ரன்களுக்குள் 7 விக்கெட் இழந்து தோல்வியை சந்தித்துள்ளது. 

இந்த தோல்வியின் மூலம் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் கனவும் கரைந்து போயுள்ளது. இந்த வெற்றியின்மூலம் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் 2 -1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 

click me!