
ஆஸ்திரேலியாவை எதிர்த்து நடக்கும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 248 ஒட்டங்கள் எடுத்துள்ளது.
இமாச்சலப் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் 300 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு ஓவரில் ஓட்டங்கள் ஏதும் எடுக்க முடியவில்லை.
இரண்டாவது நாளான நேற்றுத் தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் முரளி விஜய் 11 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஹேஸில்வுட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டிடம் கேட்ச் ஆனார்.
பின்னர், கே.எல்.ராகுலுடன் இணைந்தார் புஜாரா. அவர், ஒருபுறம் நிதானமாக ஆட, மறுமுனையில் அசத்தலாக ஆடிய ராகுல் 98 பந்துகளில் அரை சதம் கண்டார்.
இந்திய அணி 40.2 ஓவர்களில் 108 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ராகுலின் விக்கெட்டை இழந்தது. 124 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் சேர்த்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 87 ஓட்டங்கள் சேர்த்தது.
பின்னர், புஜாராவுடன் இணைந்த கேப்டன் அஜிங்க்ய ரஹானே நிதானமாக ஆட, இந்தியாவின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. தடுப்பாட்டம் ஆடிய புஜாரா 132 பந்துகளில் அரை சதம் கண்டார்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு புஜாரா 151 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா - ரஹானே ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 49 ஓட்டங்கள் சேர்த்தது.
பின்னர் வந்த கருண் நாயர் 5 ஓட்டங்களில் நடையைக் கட்ட, அஸ்வின் களம் புகுந்தார். ரஹானே நிதானமாக ஆடியபோதும், அஸ்வின் சற்று வேகமாக ஓட்டங்கள் சேர்த்தார். தடுப்பாட்டம் ஆடுவதிலேயே தீவிர கவனம் செலுத்திய ரஹானே 4 ஓட்டங்களில் அரை சதத்தை கோட்டைவிட்டார். அவர் 104 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் சேர்த்து லயன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா நிதானமாக ஆட, மறுமுனையில் வேகமாக ரன் சேர்த்த அஸ்வின் 49 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் லயன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.
பின்னர், சாஹாவுடன் ஜோடி சேர்ந்தார் ஜடேஜா. இந்த ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டது.
இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 91 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சாஹா 10, ஜடேஜா 16 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றால் மட்டுமே இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.