
ரவி சாஸ்திரி விண்ணப்பித்திருந்தால் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்வது குறித்து நான் சிந்தித்திருக்க மாட்டேன் என்று முன்னாள் அதிரடி தொடக்க வீரரான வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி, சேவாக் உள்ளிட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர். பயிற்சியாளரை நியமிக்கும் பிசிசிஐ ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருந்த முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, ரவி சாஸ்திரிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும், கோலியின் ஆதரவு இருந்ததால் கடந்த ஜூலையில் ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
அது தொடர்பாக சேவாக், “பிசிசிஐயில் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு எனக்கு இல்லாததால், பயிற்சியாளர் பதவியைப் பெற முடியவில்லை.
இந்திய அணிக்கு பயிற்சியளிப்பது குறித்து நான் ஒருபோதும் நினைத்ததில்லை. பிசிசிஐ சார்பில் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு என்னிடம் தெரிவிக்கப்பட்டது. பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளத்ரி, பொது மேலாளர் (கிரிக்கெட் மேம்பாடு) ஸ்ரீதர் ஆகியோர் பயிற்சியாளர் பதவி குறித்து சிந்திக்குமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலியிடமும் ஆலோசித்தேன். அவரும் விண்ணப்பிக்குமாறு என்னிடம் தெரிவித்தார். அதன்பிறகே நான் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தேன்.
பயிற்சியாளர் பதவி மீது எனக்கு ஒருபோதும் ஆர்வம் இருந்ததில்லை. அவர்களாகவே கேட்டுக் கொண்டதன் காரணமாக அவர்களுக்கு உதவலாம் என நினைத்து விண்ணப்பம் செய்தேன்.
மற்றபடி எனக்குள் அதுபோன்ற ஓர் எண்ணம் இருந்ததில்லை. எதிர்காலத்திலும் அந்த பதவிக்கு விண்ணப்பிக்க மாட்டேன். சாம்பியன்ஸ் டிராபி போட்டியின்போது நான் இங்கிலாந்தில் இருந்தேன். அப்போது ரவி சாஸ்திரியிடம் பயிற்சியாளர் பதவிக்கு ஏன் விண்ணப்பிக்கவில்லை என்று கேட்டேன்.
அதற்கு அவர், "நான் ஏற்கெனவே அந்தப் பதவியில் இருந்துவிட்டேன். ஏற்கெனவே செய்த தவறை மீண்டும் செய்யமாட்டேன்' என கூறினார்.
ரவி சாஸ்திரி ஆரம்பத்திலேயே விண்ணப்பித்திருந்தால், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்வது குறித்து நான் சிந்தித்திருக்க மாட்டேன்” என்று அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.