
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதையடுத்து 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இரண்டு இன்னிங்ஸ்களிலுமாக 11 விக்கெட்டுகளை சாய்த்த தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்த ரபாடா, உற்சாக வெறியில் ஸ்மித்தின் தோளில் மோதினார்.
ரபாடாவின் இந்த நடவடிக்கை தொடர்பாக போட்டி நடுவர்கள் புகார் அளித்ததையடுத்து இந்தத் தொடரின் எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ரபாடா முதலிடம் பிடித்துள்ளார். 902 புள்ளிகளுடன் 15 புள்ளிகள் இடைவெளியுடன் அடுத்த இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். பந்துவீச்சுத் தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்த நான்காவது தென் ஆப்பிரிக்க வீரர் என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இரண்டு டெஸ்டுகளில் தடை விதிக்கப்பட்டதால் டெஸ்ட் தொடரில் மேலும் பங்குபெற முடியாமல்போன ரபாடாவுக்கு இந்தத் தகவல் ஆறுதலாக அமைந்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.