கடைசில கவாஸ்கர் சொன்னது மாதிரியே ஆயிடுச்சு!! சொன்னதை கேட்டிருந்தா ஜெயிச்சுருக்கலாம்

By karthikeyan VFirst Published Sep 3, 2018, 9:57 AM IST
Highlights

நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி 3-1 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. 
 

நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி 3-1 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கோலி, ரஹானேவை தவிர வேறு எந்த வீரரும் சரியாக பேட்டிங் ஆடவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி, மூன்றாவது போட்டியில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அசத்தி வெற்றி பெற்றது. 

தோல்வியிலிருந்து மீண்டெழுந்த இந்திய அணி, அதே வேகத்துடன் அதை தக்கவைத்துக்கொள்ளவில்லை. நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களும் புஜாராவின் அபாரமான சதத்தால் இந்திய அணி 273 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் பட்லர், ஸ்டோக்ஸ், சாம் கரன் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 271 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கும் முன்பாகவே, இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதாவது சவுத்தாம்ப்டனில் நான்காம் நாள் ஆட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் எடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஆடுகளத்தின் தன்மை இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர்களான மொயின் அலி மற்றும் அடில் ரஷீத்திற்கு சாதகமாக இருக்கும். எனவே இந்திய வீரர்கள் கவனமாக ஆட வேண்டும். மூன்றாம் நாள் ஆட்டத்தின்போதே நிலையற்ற தன்மையில் பந்து எழும்பியது. இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு ஆட வேண்டும். இவையெல்லாம் இந்திய பேட்ஸ்மேன்களின் பேட்டிங் டெக்னிக்கை சோதிக்கும் வகையில் அமையும் என கவாஸ்கர் தெரிவித்திருந்தார். 

ஆனால் அவர் கூறியதை போலவே இந்திய பேட்ஸ்மேன்கள், மொயின் அலியிடம் சரணடைந்தனர். ராகுல், தவான், புஜாரா ஆகியோரின் விக்கெட்டுகளை 22 ரன்களுக்குள்ளாகவே இந்திய அணி இழந்திருந்தாலும் கோலி-ரஹானே ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை மீட்டெடுத்தது. இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 101 ரன்களை சேர்த்தது. கோலி 58 ரன்களில் மொயின் அலியின் சுழலில் சிக்கினார். அதன்பிறகு ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார் ஹர்திக் பாண்டியா. அதன்பிறகு ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட், வந்ததுமே பவுண்டரி, சிக்ஸர் என அதிரடி காட்டினார். ஆனால் அவர் அதிரடியை தொடர்ந்ததால், திட்டமிட்டு அவரையும் அவுட்டாக்கினார் மொயின் அலி. பின்னர் ரஹானேவையும் மொயின் அலி வீழ்த்தினார். 

இந்திய அணி 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை அடுத்து இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என தொடரையும் வென்றது. 

கவாஸ்கர் கூறியபடியே, ஆடுகளத்தின் தன்மை மொயின் அலியின் சுழலுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் முன்கூட்டியே கவாஸ்கர் எச்சரித்தபடி, இந்திய வீரர்கள் இன்னும் கொஞ்சம் கவனமாக ஆடியிருந்தால், வெற்றி வசமாகியிருக்கும்.
 

click me!