அவருலாம் வேலைக்கு ஆகமாட்டாரு.. கடைசி போட்டியில் கவாஸ்கர் வலியுறுத்தும் ஒற்றை மாற்றம்

By karthikeyan VFirst Published Jan 31, 2019, 5:19 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து, கடைசி போட்டியில் இந்திய அணியில் ஆடும் லெவன் வீரர்கள் குறித்த தனது பரிந்துரையை பதிவு செய்துள்ளார் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர். 
 

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து, கடைசி போட்டியில் இந்திய அணியில் ஆடும் லெவன் வீரர்கள் குறித்த தனது பரிந்துரையை பதிவு செய்துள்ளார் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர். 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றில் இந்திய அணி ஆடிவருகிறது. 

முதலில் ஒருநாள் தொடர் நடந்துவரும் நிலையில், முதல் மூன்று போட்டிகளில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே நியூசிலாந்து அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய இந்திய அணி, 3 போட்டிகளிலும் வென்று தொடரை வென்றுவிட்டது. 3-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், நான்காவது போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. 

இந்த போட்டியில், முதல் மூன்று போட்டிகளில் ஆடியதற்கு அப்படியே நேர்மாறாக ஆடியது இந்திய அணி. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய தொடக்கம் முதலே விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. ஹாமில்டன் ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகின. அதை நன்கு பயன்படுத்தி அபாரமாக பந்துவீசினார் டிரெண்ட் போல்ட். போல்ட்டின் வேகத்தை சமாளிக்க முடியாமல் இந்திய அணி சரிந்தது. வெறும் 92 ரன்களில் ஆல் அவுட்டானது இந்திய அணி. 93 ரன்கள் என்ற இலக்கை 15வது ஓவரிலேயே எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

நான்காவது போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி, தோனி ஆகியோர் ஆடவில்லை. இவர்கள் இருவரும் ஆடாதது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக ஷுப்மன் கில் ஆடினார். தோனிக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளில் தினேஷ் கார்த்திக் ஆடினார். மூன்றாவது போட்டியில் 38 ரன்கள் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்த தினேஷ் கார்த்திக், இந்த போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றினார். 

இதே தோனியாக இருந்திருந்தால், களத்தில் நங்கூரத்தை போட்டு சிறுக சிறுக ரன்களை சேர்த்திருப்பார். அதை செய்ய தவறிவிட்டார் தினேஷ் கார்த்திக். தோனியின் தேவையை இந்த தோல்வி உணர்த்தியுள்ளது. 

நான்காவது போட்டியில் இந்திய அணி அடைந்த படுதோல்வியை அடுத்து கடைசி போட்டியில் ஆட வேண்டிய இந்திய அணி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் கவாஸ்கர். இதுகுறித்து பேசிய கவாஸ்கர், கடைசி போட்டியில் தினேஷ் கார்த்திற்கு பதிலாக தோனி கண்டிப்பாக ஆடவேண்டும். இது ஒன்றுதான் நான் கடைசி போட்டியில் பார்க்க விரும்பும் மாற்றம். இதுதவிர மற்ற மாற்றங்கள், ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து செய்யப்படலாம். ஆனால் தோனி கண்டிப்பாக ஆட வேண்டும். ஷுப்மன் கில்லுக்கு கண்டிப்பாக மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 
 

click me!