கங்குலியை கவலைப்பட வைத்த அஷ்வின்!!

By karthikeyan VFirst Published Dec 26, 2018, 5:10 PM IST
Highlights

முக்கியமான வெளிநாட்டு தொடர்களின்போது அடிக்கடி அஷ்வின் காயமடைவது குறித்து கங்குலி கவலை தெரிவித்துள்ளார். 
 

முக்கியமான வெளிநாட்டு தொடர்களின்போது அடிக்கடி அஷ்வின் காயமடைவது குறித்து கங்குலி கவலை தெரிவித்துள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலை அடைந்துள்ள நிலையில், மூன்றாவது போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. 

இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிராத இந்திய அணி, ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக இந்திய அணி மட்டுமல்லாது முன்னாள் வீரர்களும் நம்புகின்றனர்.

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் ஆஸ்திரேலிய அணி வலுவிழந்திருக்கிறது என்றால், இந்திய அணி அதன் சிறந்த 11 வீரர்களுடன் களமிறங்க வேண்டும். ஆனால் இந்திய அணி அப்படி இறங்குகிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். முதல் போட்டியில் ரோஹித்தும் அஷ்வினும் காயமடைந்ததால் அவர்கள் இருவரும் இரண்டாவது போட்டியில் ஆடவில்லை. 

ரோஹித் ஆடாதது பெரிய பாதிப்பாக கருத வேண்டாம் என்றாலும், இந்திய டெஸ்ட் அணியின் அனுபவம் வாய்ந்த நட்சத்திர  ஸ்பின்னரான அஷ்வின் ஆடாதது பெரிய இழப்புதான். ஏனென்றால் பெர்த் டெஸ்டில் இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமே ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயன் தான். அவர் மட்டுமே 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வீழ்த்துவதற்கு காரணமாக திகழ்ந்தார். 

பெர்த் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் அஷ்வின் காயத்தால் அந்த போட்டியில் இந்திய அணி ஸ்பின் பவுலரே இல்லாமல் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியதுதான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் போட்டியில் உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஹாரிஸ், ஷான் மார்ஷ் ஆகிய மூன்று விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே வீழ்த்தி இந்திய அணிக்கு பலம் சேர்த்தார் அஷ்வின். முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே தலா 2 விக்கெட்டுகள் என மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஷ்வின். 

ஆனால் காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் ஆடாதது பெரிய பாதிப்பாக அமைந்தது. இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னரான அஷ்வின், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய முக்கியமான வெளிநாட்டு தொடர்களிலும் காயம் காரணமாக முழு தொடரிலும் ஆடவில்லை. இந்திய அணியின் முக்கியமான பவுலர், முக்கியமான வெளிநாட்டு தொடர்களில் இப்படி காயமடைவது அணிக்கு நல்லதல்ல. 

இந்நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் கங்குலி எழுதியுள்ள கட்டுரையில், அஷ்வின் அடிக்கடி காயமடைவது குறித்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து எழுதியுள்ள கங்குலி, அஷ்வின் அடிக்கடி காயமடைவது கவலையளிக்கிறது. இப்படி அடிக்கடி காயமடைந்தால் அவரால் இந்திய அணியின் பிரீமியர் ஸ்பின்னராக செயல்பட முடியாது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற முக்கியமான பெரிய தொடர்களின் போது அவர் காயமடைந்து விடுகிறார். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அஷ்வின், இந்திய அணிக்கு கண்டிப்பாக தேவை. ஆனால் அவரோ காயமடைந்து களத்தில் ஆடாமல் வெளியே உட்கார்ந்து விடுகிறார் என்று கங்குலி கவலை தெரிவித்தார். 
 

click me!