2 உலக கோப்பையை வென்று கொடுத்த காம்பீர் ஓய்வு..? மௌனம் கலைத்தார்

By karthikeyan VFirst Published Oct 16, 2018, 2:46 PM IST
Highlights

நீண்டகாலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்துவரும் கவுதம் காம்பீர், தனது ஓய்வு குறித்து மௌனம் கலைத்துள்ளார்.
 

நீண்டகாலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்துவரும் கவுதம் காம்பீர், தனது ஓய்வு குறித்து பேசியுள்ளார். 

இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக திகழ்ந்தவர் கவுதம் காம்பீர். பல இக்கட்டான தருணங்களில் இந்திய அணியை மீட்டெடுத்து அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்த வீரர். 

குறிப்பாக இந்திய அணி வென்ற டி20 உலக கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பை ஆகியவற்றில் கவுதம் காம்பீரின் பங்களிப்பு அளப்பரியது. 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலக கோப்பை ஆகிய இரண்டு தொடர்களிலும் அபாரமாக ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர். அதிலும் குறிப்பாக இரண்டு உலக கோப்பையின் இறுதி போட்டியிலும் அபாரமாக பேட்டிங் ஆடி, அதிகபட்ச ஸ்கோரை அடித்த வீரர் காம்பீர் தான். 

இவ்வாறு இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான வீரர்களில் ஒருவர் கவுதம் காம்பீர். காம்பீர் நல்ல ஃபார்மில் இருந்தும் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். கடைசியாக 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடியதுதான். அதன்பிறகு காம்பீர் இந்திய அணியில் ஆடவில்லை.

காம்பீரின் பேட்டிங் திறமை மற்றும் அவரது நேர்மை ஆகியவற்றின் காரணமாக காம்பீருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாள உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் ஆடிவருகிறார்.

தற்போது நடந்துவரும் விஜய் ஹசாரே தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். கடந்த 14ம் தேதி அவரது 37வது பிறந்தநாள். அன்றைய தினம், ஹரியானாவுக்கு எதிராக நடந்த காலிறுதி போட்டியில் சதமடித்து டெல்லி அணியை வெற்றி பெறச்செய்தார். அரையிறுதியில் ஜார்கண்ட் அணியுடன் டெல்லி அணி மோத உள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காம்பீரிடம் அவரது ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த காம்பீர், இப்போதைக்கு ஓய்வு பெறுவது யோசிக்கவில்லை. நன்றாக ஆடி ரன்களை குவித்து வருகிறேன்; அது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நன்றாக ஆடி அணியை வெற்றி பெறவைத்து விட்டு ஓய்வறைக்கு வரும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த ஓய்வறை சூழல்தான் எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. என்றைக்கு எனக்கு இதுபோன்ற உணர்வுகள் இல்லாமல் போகிறதோ அப்போது ஓய்வை பற்றி சிந்திப்பேன். ஒரு விளையாட்டு வீரராக சவால்களை எதிர்கொண்டு வளர்வதுதான் நம்மை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திக்கொண்டே இருக்கும் என்று காம்பீர் தெரிவித்தார். 
 

click me!