4-1 என ஜெயிச்சா கூட மூடிகிட்டுத்தான் இருக்கணும்!! அவரு சரியா கிரிக்கெட்டே பார்த்தது இல்லைனு நினைக்கிறேன்.. தெறிக்கவிட்ட காம்பீர்

By karthikeyan VFirst Published Dec 15, 2018, 12:32 PM IST
Highlights

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை தனது அதிரடியான கருத்துகளால் தெறிக்கவிட்டுள்ளார் கவுதம் காம்பீர்.
 

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை தனது அதிரடியான கருத்துகளால் தெறிக்கவிட்டுள்ளார் கவுதம் காம்பீர்.

இந்திய அணி தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை இழந்தது. டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணியாக இருந்தாலும் வெளிநாடுகளில் தொடர்ந்து சொதப்பிவருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ஆடிவரும் இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 

இதற்கிடையே இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி சொதப்பலாக ஆடியபோது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அந்த சமயத்தில், அதை சமாளிக்கும் விதமாக பேசிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கடந்த 15 ஆண்டுகளில் தற்போதைய இந்திய அணி தான் மிகச்சிறந்த டிராவலிங் அணி என தெரிவித்தார். 

ரவி சாஸ்திரியின் இந்த கருத்தை கடுமையாக எதிர்த்த கவாஸ்கர், கங்குலி ஆகியோர் அவரை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், அண்மையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கவுதம் காம்பீர், ஒரு பேட்டியில் ரவி சாஸ்திரியின் இந்த கருத்தையும் அவரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த காம்பீர், யார் எதையுமே சாதிக்கவில்லையோ அவர்கள் தான் இப்படியான கருத்துகளை கூறுவர். சாஸ்திரி அவரது கிரிக்கெட் வாழ்வில் பெரிதாக ஒன்றையும் சாதித்ததில்லை. வெளிநாட்டில் டெஸ்ட் தொடர்களை வென்ற அணியில் அவர் ஆடியதாக எனக்கு தெரியவில்லை. எதையுமே சாதிக்காதவர்கள் தான் இதுமாதிரியான கருத்துகளை கூறுவர். அந்த வகையில் சாஸ்திரியின் கருத்தை யாருமே பெரிதாக எடுத்து கொண்டிருக்க மாட்டார்கள் என்றுதான் கருதுகிறேன். ரவி சாஸ்திரி சரியாக கிரிக்கெட்டை கவனித்ததில்லை, பார்த்ததில்லை என்றே நினைக்கிறேன். அதனால்தான் இப்படியொரு கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார். 

வெளிநாட்டில் 4-1 என டெஸ்ட் தொடரை வென்றால் கூட மிகவும் அடக்கமாக, அடுத்தகட்ட நகர்வை நோக்கித்தான் யோசிக்க வேண்டும் மற்றும் செயல்பட வேண்டுமே தவிர, இதுமாதிரியான சிறுபிள்ளைத்தனமாக பேசக்கூடாது என ரவி சாஸ்திரியை கடுமையாக சாடியுள்ளார் காம்பீர். 

click me!