
யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 3-வது நாளில் நடைபெற்ற ஆட்டங்களில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் அபார வெற்றிக் கண்டன.
பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டி அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெற்றது.
முதல் ஆட்டத்தில் பிரான்ஸும், நியூ கேல்டோனியாவும் மோதின. இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. 5-வது நிமிடத்தில் நியூ கேல்டோனியா வீரர் பெர்னாட் ஐவா "ஓன் கோல்' அடிக்க, பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
அதனைத் தொடர்ந்து 20-வது நிமிடத்தில் அமைன் கோவ்ரே கோலடிக்க, பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர், 30-வது நிமிடத்தில் பிரான்ஸின் கிளாடியோவும், 33-வது நிமிடத்தில் கோவ்ரேவும் கோலடிக்க, 40-வது நிமிடத்தில் மேக்ஸ்ஸன்ஸ் காக்கெரட் கோலடித்தார். இதனால் பிரான்ஸ் 5-0 என்று முன்னிலையை எட்டியது.
இந்த நிலையில் நியூ கேல்டோனியாவின் கியாம் வேனெஸ்ஸி 43-வது நிமிடத்தில் "ஓன் கோல்' அடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் அணி 6-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் நியூ கேல்டோனியாவின் வெடின்ஜெஸ் கோலடிக்க, "இஞ்சுரி' நேரத்தில் பிரான்ஸின் இஸிடோர் கோலடித்தார். இதனால் பிரான்ஸ் அணி 7-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது.
அதேபோன்று, கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், சிலியும் மோதின. இந்த ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் முதல் கோலை இங்கிலாந்தின் ஹட்சன் ஓடோய் அடித்தார்.
இதன்பிறகு முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழாத நிலையில், பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 51 மற்றும் 60-வது நிமிடங்களில் இங்கிலாந்து வீரர் சான்கோ கோலடிக்க, அந்த அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பிறகு 81-வது நிமிடத்தில் ஹோம்ஸ் கோலடிக்க, இங்கிலாந்து 4-0 என்ற கோல் கணக்கில் சிலி அணியை தோற்கடித்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.