தோனி செஞ்ச இந்த ஒரு சம்பவம் அவரு அரைசதம் அடிச்சதுக்கு சமம்!!

By karthikeyan VFirst Published Feb 3, 2019, 2:48 PM IST
Highlights

கேதர் ஜாதவ் வீசிய 37வது ஓவரின் இரண்டாவது பந்து, நீஷமின் கால்காப்பில் பட்டது. அதற்கு தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய இருவரும் எல்பிடபிள்யூ அப்பீல் செய்தனர். 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 252 ரன்கள் எடுத்தது. 

253 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவிலேயே இழந்துவிட்டது. ஆட்டத்தின் நான்காவது ஓவரிலேயே நிகோல்ஸை 8 ரன்களில் வெளியேற்றிய ஷமி, அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வந்த கோலின் முன்ரோவை 24 ரன்களில் போல்டாக்கி அனுப்பினார். இதையடுத்து களத்திற்கு வந்த டெய்லரை தனது முதல் ஓவரிலேயே அவுட்டாக்கினார் ஹர்திக் பாண்டியா. 

38 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது நியூசிலாந்து அணி. அதன்பிறகு கேப்டன் கேன் வில்லியம்சன் - டாம் லதாம் ஜோடி ரன் சேர்ப்பதில் அவசரப்படாமல் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். அவர்கள் மெதுவாக போட்டியை இந்திய அணியிடமிருந்து பறித்து சென்ற வேளையில், வில்லியம்சனை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் கேதர் ஜாதவ். அதன்பிறகு டாம் லதாம் மற்றும் கோலின் டி கிராண்ட்ஹோம் ஆகிய இருவரையும் சாஹல் வீழ்த்தினார். 

இதையடுத்து போட்டி இந்திய அணிக்கு சாதகமாக திரும்பிய நிலையில், ஜேம்ஸ் நீஷம் அதிரடியாக ஆடி சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசி, மீண்டும் போட்டியை இந்திய அணியிடமிருந்து எடுத்து சென்றார். புவனேஷ்வர் குமார் வீசிய 36வது ஓவரில் பவுண்டரியும் சிக்ஸரும் விளாசினார். 4 பவுண்டர்கள், 2 சிக்ஸர்களுடன் அதிரடியாக ஆடி இந்திய அணியை மிரட்டிவந்த நீஷமை, தோனி ரன் அவுட் செய்தார். 

கேதர் ஜாதவ் வீசிய 37வது ஓவரின் இரண்டாவது பந்து, நீஷமின் கால்காப்பில் பட்டது. அதற்கு தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய இருவரும் எல்பிடபிள்யூ அப்பீல் செய்தனர். அந்த பந்து நீஷமின் கால் காப்பில் பட்டு தோனியின் காலில் பட்டு பின்னால் கிடந்தது. தோனி அம்பயரிடம் அப்பீல் செய்வதில் பிசியாக இருக்கும் தருணத்தை பயன்படுத்தி ரன் ஓடலாம் என்று நினைத்த நீஷம், கிரீஸை விட்டு சற்று நகன்றிருந்தார். அவர் கிரீஸிலிருந்து விலகியிருந்ததை கண்ட தோனி, உடனடியாக பந்தை எடுத்து ரன் அவுட் செய்தார். இதை சற்றும் எதிர்பாராத நீஷம், மிகுந்த அதிருப்தியுடன் நடையை கட்டினார். 

இந்திய பவுலர்களின் மீது ஆதிக்கம் செலுத்தி அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நீஷமை, அசால்ட்டாக ரன் அவுட் செய்து அனுப்பினார் தோனி. நீஷம் தொடர்ந்து களத்தில் நின்றிருந்தால் நியூசிலாந்து அணியை எளிதாக வெற்றி பெற வைத்திருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால் நீஷம் அவுட்டானதும் போட்டி, இந்திய அணியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தோனி பேட்டிங்கில் சோபிக்காவிட்டாலும், அவர் செய்த இந்த ஒரு ரன் அவுட், அவர் அரைசதம் அடித்ததற்கு சமம். 
 

click me!