தவானை தூக்கி அங்கே நிறுத்துவோம்னு சொன்ன தல.. சரினு சொன்ன ரோஹித்!! விளைவு விக்கெட்.. அதுதான்டா தோனியின் அனுபவம்

By karthikeyan VFirst Published Sep 22, 2018, 10:11 AM IST
Highlights

தோனி கூறிய ஆலோசனையை ஏற்று கேப்டன் ரோஹித் செயல்பட்டதன் எதிரொலியாக ஷாகிப் அல் ஹாசன் விக்கெட் வீழ்த்தப்பட்டது. 
 

தோனி கூறிய ஆலோசனையை ஏற்று கேப்டன் ரோஹித் செயல்பட்டதன் எதிரொலியாக ஷாகிப் அல் ஹாசன் விக்கெட் வீழ்த்தப்பட்டது. 

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. துபாயில் நடந்த இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 49.1 ஓவரில் 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஓராண்டுக்கு பிறகு மீண்டும் ஒருநாள் அணியில் ஆடிய ஜடேஜா, அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

174 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா பொறுப்புடன் ஆடி, இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று அணியை வெற்றி பெற செய்தார். 36.2 ஓவரில் இலக்கை எட்டி இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில், தோனி உலக கோப்பை வரை அணியில் எதற்குத்தேவை என்பதை நிரூபித்துக் காட்டினார். ஜடேஜா வீசிய 10வது ஓவரில் இரண்டாவது பந்தை இரண்டு முறை நோ பாலாக வீசினார். முதல் ஃப்ரீஹிட்டை தவறவிட்ட ஷாகிப் அல் ஹாசன் இரண்டாவது ஃப்ரீஹிட்டை பவுண்டரி விளாசினார். பின்னர் அடுத்த பந்தை ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரி விளாசினார். அப்போது ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டர் இல்லாமல் ஓபனாக கிடந்தது. அதை பயன்படுத்தி ஷாகிப் பவுண்டரி அடித்தார். 

அந்த நேரத்தில் தவான், முதல் ஸ்லிப்பில் நின்றார். தவான் அந்த இடத்தில் தேவையில்லை; அதே நேரத்தில் ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டர் தேவை என்பதை அறிந்த தோனி, ரோஹித்திடம் தவானை ஸ்லிப்பில் இருந்து தூக்கி ஸ்கொயர் லெக் திசையில் நிறுத்துமாறு அறிவுறுத்தினார். கேப்டன் ரோஹித்தும் தோனியின் ஆலோசனையை ஏற்று செயல்பட்டார். அதன்விளைவாக அடுத்த பந்தே ஸ்கொயர் லெக் திசையில் மீண்டும் பவுண்டரி அடிக்க முயன்று தூக்கி அடித்த ஷாகிப் அல் ஹாசன், தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

தோனி பேட்டிங்கில் சோபிக்கவில்லை என்ற விமர்சனங்கள் இருந்தாலும், இதுபோன்ற சிறந்த ஆலோசனைகளை தனது அனுபவத்தின் வாயிலாக கேப்டனுக்கும் வீரர்களுக்கும் வழங்குவதற்காகவே உலக கோப்பை வரை தோனி கண்டிப்பாக ஆடவேண்டும். 
 

click me!