களத்திலிருந்து பயிற்சியாளருடன் வாக்கி டாக்கியில் பேசிய டிவில்லியர்ஸ்!! இனிமே இப்படித்தான்

By karthikeyan VFirst Published Nov 18, 2018, 11:29 AM IST
Highlights

ஆட்டத்தின் 6வது ஓவரின் போது திடீரென ஸ்பார்டான்ஸ் அணியின் கேப்டன் டிவில்லியர்ஸ் வாக்கி டாக்கியில் பயிற்சியாளர் மார்க் பௌச்சருடன் பேசினார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் டி20 லீக் தொடரில் ஸ்பார்டான்ஸ் அணியின் கேப்டன் டிவில்லியர்ஸ், மைதானத்தில் இருந்தபடியே பயிற்சியாளருடன் வாக்கி டாக்கியில் பேசிய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

இந்தியாவில் ஐபிஎல்லைப்போல தென்னாப்பிரிக்காவில் மசான்ஸி சூப்பர் லீக் என்ற பெயரில் டி20 லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் முதல் போட்டியில் டிவில்லியர்ஸ் தலைமையிலான டிஷ்வானே ஸ்பார்டான்ஸ் மற்றும் கேப்டவுன் பிளிட்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதின. இந்த போட்டியில் கேப்டவுன் பிளிட்ஸ் அணி டிவில்லியர்ஸ் தலைமையிலான ஸ்பார்டான்ஸ் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இந்த தொடரில் புதிதாக ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பிளிட்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அப்போது 6வது ஓவரின் போது திடீரென ஸ்பார்டான்ஸ் அணியின் கேப்டன் டிவில்லியர்ஸ் வாக்கி டாக்கியில் பயிற்சியாளர் மார்க் பௌச்சருடன் பேசினார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல 14வது ஓவரிலும் ஒருமுறை பயிற்சியாளருடன் பேசினார். பிளிட்ஸ் அணியின் இன்னிங்ஸின் போது ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த டிவில்லியர்ஸ் இரண்டு முறை பேசினார். டிவில்லியர்ஸ் பேசிய இரண்டு தருணங்களையும் வைத்து பார்க்கையில் இக்கட்டான சூழலில் பயிற்சியாளரிடம் ஆலோசனை கேட்க வாக்கி டாக்கியின் மூலம் தொடர்புகொள்ளும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. 

ஜேசன் ஸ்மித் - மாலன் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாதபோது 6வது ஓவரில் வாக்கி டாக்கியில் பேசினார் டிவில்லியர்ஸ். பின்னர் அதே ஓவரில் மாலன் அவுட்டானார். அதேபோல 14வது ஓவரிலும் டிவில்லியர்ஸ் பேசினார். பொதுவாக களத்தில் வீரர்கள் எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்த அனுமதி கிடையாது. ஐபிஎல் போட்டிகளில் களத்தில் இருக்கும் வீரர்களுடன் வர்ணனையாளர்கள் ஹெட்போனில் உரையாடுவது வழக்கம். 

ஆனால் இக்கட்டான சூழலில் பயிற்சியாளருடன் கேப்டன் வாக்கி டாக்கியில் உரையாடுவது இதுதான் முதன்முறை. ஆனால் எதிரணியின் கேப்டன் வாக்கி டாக்கியை பயன்படுத்தவில்லை. ஏனென்றால் அந்த அணிக்கு இக்கட்டான சூழல் எதுவும் உருவாகவில்லை. மேலும் வாக்கி டாக்கியை இரண்டு முறை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதனால்தான் டிவில்லியர்ஸ் இரண்டுமுறை பயன்படுத்தியிருக்கலாம். 
 

click me!