
கௌகாத்தி,
8 அணிகள் இடையிலான 3–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இன்று இரவு 7 மணிக்கு கௌகாத்தி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் 18–வது லீக்கில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி.யும், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் (கவுகாத்தி) பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 10 புள்ளிகளை (3 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) பெற்று முதலிடம் வகிக்கும் கௌகாத்தி அணிக்கு உள்ளூர் இரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும்.
இந்த சீசனில் சொந்த ஊரில் ஆடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. கௌகாத்தி பயிற்சியாளர் நெலோ வின்கடா கூறும் போது, ‘கவுகாத்தி மற்றும் வடகிழக்கு மண்டலத்தில் உள்ள மற்ற பகுதி மக்கள் இந்த அணியையும், வீரர்களையும் நினைத்து நிச்சயம் பெருமைப்படுவார்கள்.
நாங்கள் இதுவரை 10 புள்ளிகளை பெற்று இருப்பது நல்ல அறிகுறி தான். ஆனாலும் இன்னும் எங்களது இலக்கை அடையவில்லை. அரைஇறுதியை எட்ட வேண்டும் என்பதே முதற்கட்ட இலக்கு’ என்றார்.
3 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னையின் எப்.சி. அணி 4 புள்ளியுடன் (ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 6–வது இடத்தில் இருக்கிறது. பலம் வாய்ந்த கௌகாத்தியை வீழ்த்தினால் சென்னை அணியின் நம்பிக்கை அதிகரிக்கும்.
சென்னையின் எப்.சி. பயிற்சியாளர் மெட்டராசி கூறுகையில், ‘நாங்கள் முற்றிலும் புதிய மனநிலையுடன் வந்துள்ளோம். தங்களது மனதை, வேட்கையை, உத்வேகத்தை ஆட்டத்தின் மீது முழுமையாக செலுத்தினால், வெற்றி நிச்சயம் என்று எங்களது வீரர்களிடம் சொல்லி இருக்கிறேன். அப்படி செய்யாவிட்டால், புள்ளி பட்டியலில் பின்வரிசைக்கு தள்ளப்படலாம்’ என்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.