நாங்களும் சளைச்சவங்க இல்லடா.. 2 விக்கெட்டை தட்டி தூக்கிய புவனேஷ்வர் குமார்

By karthikeyan VFirst Published Jan 31, 2019, 10:43 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணியின் 2 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்திவிட்டார் புவனேஷ்வர் குமார். 
 

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணியின் 2 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்திவிட்டார் புவனேஷ்வர் குமார். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் வென்று இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், நான்காவது போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக ஷுப்மன் கில்லும் காயத்திலிருந்து மீளாத தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கும் ஷமிக்கு பதிலாக கலீல் அகமதுவும் இந்த போட்டியில் ஆடுகின்றனர்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, டிரெண்ட் போல்ட்டின் வேகத்தை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. தவான், ரோஹித், ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் போல்ட் வீழ்த்தினார். ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் கோலின் டி கிராண்ட்ஹோம் டக் அவுட்டாக்கி அனுப்பினார். 

33 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இந்திய அணி, 35 ரன்களுக்கு 6வது விக்கெட்டையும் 40 ரன்களுக்கு 7வது விக்கெட்டையும் 55 ரன்களுக்கு 8வது விக்கெட்டாக ஹர்திக் பாண்டியாவையும் இழந்து திணறியது. 9வது விக்கெட்டுக்கு குல்தீப்பும் சாஹலும் இணைந்து 25 ரன்கள் சேர்த்தனர். குல்தீப் யாதவ் 15 ரன்களில் 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக கலீல் அகமது ஆட்டமிழக்க, இந்திய அணி 92 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது. சாஹல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 18 ரன்கள் எடுத்திருந்தார்.  

நியூசிலாந்து அணியின் சார்பில் அபாரமாக பந்துவீசிய டிரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும் கோலின் டி கிராண்ட்ஹோம் 3 விக்கெட்டுகளையும் ஆஸ்டில் மற்றும் நீஷம் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதையடுத்து 93 ரன்கள் என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்டின் கப்டில் மற்றும் நிகோல்ஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி ரன் கணக்கை தொடங்கிய மார்டின் கப்டில், அடுத்த இரண்டு பந்துகளிலும் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். முதல் மூன்று பந்துகளிலேயே 14 ரன்கள் எடுத்ததை அடுத்து அதிரடியை தொடர நினைத்த கப்டிலை நான்காவது பந்திலேயே புவனேஷ்வர் குமார் வீழ்த்திவிட்டார். 

கப்டிலின் விக்கெட்டை அடுத்து நிகோல்ஸுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். கப்டிலுக்கு பிறகு நிகோல்ஸ் அதிரடியை தொடர்ந்தார். கேப்டன் வில்லியம்சனை 11 ரன்களில் வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். இதையடுத்து நிகோல்ஸுடன் ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்து இலக்கை விரட்டி வருகின்றனர்.
 

click me!