ஐபிஎல் அணிகளுக்கு கெடு விதித்த பிசிசிஐ!! பதற்றத்தில் வீரர்கள்

By karthikeyan VFirst Published Oct 19, 2018, 1:44 PM IST
Highlights

அடுத்த சீசனில் தங்கள் அணிகளுக்கு தேவையில்லை எனக்கருதும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ கெடு விதித்துள்ளது.
 

அடுத்த சீசனில் தங்கள் அணிகளுக்கு தேவையில்லை எனக்கருதும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ கெடு விதித்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. 

ஒவ்வொரு சீசன் தொடங்குவதற்கு முன்பும் வீரர்களுக்கான ஏலம் விடப்படும். அதில் அனைத்து அணிகளும் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்வர். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக ஏலம் நடத்தப்படும். 

ஒவ்வொரு அணியும் தாங்கள் ஏலத்தில் எடுக்கும் வீரர்களை மூன்றாண்டுகளுக்கு அணியில் வைத்துக்கொள்ளலாம். அதேநேரத்தில் அந்த வீரர் அடுத்த சீசனுக்கு தேவையில்லை என்றால், அவர்களை திரும்ப கொடுத்துவிடலாம். ஒவ்வொரு சீசனுக்கான ஏலத்திற்கு முன்னதாக அணிகள் திரும்ப கொடுக்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ பெறுவது வழக்கம். 

அந்த வகையில், அடுத்த சீசனுக்கு தேவையில்லை என்று விரும்பும் வீரர்களின் பட்டியலை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் கொடுக்குமாறு ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. 

கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட காம்பீர், பாதி தொடரில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியபிறகு அணியில் ஆடவைக்கப்படாமல் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டார் காம்பீர். எனவே காம்பீரை இந்த முறை அந்த அணி விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல ரூ.11.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்த உனாத்கத் மற்றும் ரூ.11 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் எடுக்கப்பட்ட மனீஷ் பாண்டே ஆகிய வீரர்கள் சரியாக ஆடாததால் இந்த வீரர்களை எல்லாம் அந்த அணி விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!