சின்ன பசங்ககிட்டயே படாத பாடுபட்ட இந்தியா!! ஆஸ்திரேலியாகிட்ட என்ன ஆகுமோ..?

By karthikeyan VFirst Published Dec 1, 2018, 11:49 AM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய லெவன் அணி முதல் இன்னிங்ஸில் அபாரமாக பேட்டிங் செய்து 544 ரன்களை குவித்தது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் இந்திய அணி பயிற்சி போட்டியில் ஆடிவருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய லெவன் அணி இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் பிரித்வி ஷா, புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோர் அரைசதம் அடித்தனர். ரோஹித் சர்மா 40 ரன்கள் அடித்தார். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய லெவன் அணி, இந்திய அணியின் பவுலிங்கை நேர்த்தியாக எதிர்கொண்டு ஆடியது. ஆஸ்திரேலிய லெவன் அணியின் தொடக்க வீரர்கள் டார்ஷி ஷார்ட் மற்றும் மேக்ஸ் பிரயாண்ட் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். ஷார்ட் 74 ரன்களும் பிரயாண்ட் 62 ரன்களும் குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய ஜேக் கார்டர் 38 ரன்களும் ஒயிட்மேன் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பரம் உப்பால் வெறும் 5 ரன்களிலும் ஜோநாதன் மெர்லோ 3 ரன்களிலும் நடையை கட்டினர்.

அதனால் 234 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலிய லெவன் அணி. இதையடுத்து 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹாரி நீல்சன் மற்றும் ஆரோன் ஹார்டி ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 180 ரன்களை குவித்து மிரட்டியது. இந்த விக்கெட்டை இந்திய பவுலர்களால் பிரிக்க முடியாமல் திணறினர். ஒருவழியாக ஆரோன் ஹார்டியை 86 ரன்களில் வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. ஹார்டி ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய நீல்சன் சதமடித்தார். 

எந்த இந்திய பவுலராலும் வீழ்த்த முடியாத நீல்சனை விராட் கோலி வீழ்த்தினார். பின்வரிசை வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 544 ரன்களை குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களை குவித்த நிலையில், ஆஸ்திரேலிய லெவன் அணியே 544 ரன்களை குவித்தது. பயிற்சி போட்டியிலேயே இந்த அடி வாங்கிய இந்திய அணியின் நிலை, ஸ்மித்தும் வார்னரும் இல்லாவிட்டாலும் கூட மெயின் ஆஸ்திரேலிய அணியிடம் என்ன ஆகுமோ..? 
 

click me!