
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக பதவி விலக நெருக்கடி அளிக்கப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் பதவி விலகினர்.
இதையடுத்து 3-வது டெஸ்டில் எஞ்சிய நாள்களில் ஆஸ்திரேலிய அணிக்கு டிம் பெய்ன் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது.
இதில் 3-ஆம் நாளான சனிக்கிழமை ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் மஞ்சள் நிற பொருள் ஒன்றை வைத்து பந்தின் தன்மையை மாற்ற முயன்றார்.
இதை, மைதானத்தில் இருந்த தொலைக்காட்சி ஒளிரப்பு கேமரா ஒன்று படம் பிடிக்க, அது மைதானத்தின் பெரிய திரையிலும் தெரிந்தது. அதனைக் கண்டு தடுமாறிய பேன்கிராஃப்ட், அந்தப் பொருளை தனது கால்சட்டையில் மறைத்து வைத்தார்.
இதனையடுத்து பந்து சேதப்படுத்தப்பட்டதாக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நடுவரிடம் புகார் அளித்தனர். அதையடுத்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முன்பாக பேன்கிராஃப்டிடம் அவரது செயல் குறித்து கேள்வி எழுப்பினர்.
பின்னர் பந்தை பரிசோதித்தவர்கள் அதே பந்தை தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தனர். எனினும், பந்தின் சில அடையாளங்கள் அழிக்கப்பட்டிருந்ததை அடுத்து 5 பெனால்டி ஓட்டங்கள் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில், 3-ஆம் நாள் போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பந்து சேதப்படுத்தப்பட்டதை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒப்புக் கொண்டார். மேலும், இந்த விவகாரம் குறித்து அணியின் முக்கிய வீரர்களுக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. கேப்டன் ஸ்மித்துக்கு எதிராக பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டன.
ஸ்மித்தை பதவி நீக்கம் செய்யுமாறு ஆஸ்திரேலிய அரசு தரப்பில் இருந்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், கேப்டன் மற்றும் துணை கேப்டன் பொறுப்புகளில் இருந்து ராஜிநாமா செய்யுமாறு ஸ்மித் மற்றும் வார்னருக்கு அறிவுறுத்தியது.
இதனையடுத்து கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் தங்களது பதவிகளில் இருந்து விலகினர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.