நானும் பீட்டர்சனும் 4 வருஷமா பேசிக்கல!! அவரை தூக்கி எறிந்தது யார்..? மனம் திறந்த அலெஸ்டர் குக்

By karthikeyan VFirst Published Sep 8, 2018, 1:47 PM IST
Highlights

இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் ஓய்வுபெறப்போகும் நிலையில், கெவின் பீட்டர்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கும் தனக்குமான தொடர்பு குறித்து விளக்கமளித்துள்ளார். 
 

இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் ஓய்வுபெறப்போகும் நிலையில், கெவின் பீட்டர்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கும் தனக்குமான தொடர்பு குறித்து விளக்கமளித்துள்ளார். 

கடந்த 2006ம் ஆண்டு இங்கிலாந்து அணியில் அறிமுகமாகி அந்த அணிக்காக 160 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12,325 ரன்களை குவித்துள்ளார் அலெஸ்டர் குக். இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் மிக மூத்த அனுபவ வீரரான குக், இந்தியாவுக்கு எதிராக நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 

தனது கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறும் சூழலில், தான் கேப்டனாக இருந்தபோது தன் மீது விழுந்த பழி குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார் குக். குக் கேப்டனாக இருந்த சமயத்தில் கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை 0-5 என இழந்தது. 

அந்த தொடரில் இங்கிலாந்து அணி சார்பில் ஓரளவிற்காவது ஆடி ரன்களை குவித்தவர் கெவின் பீட்டர்சன். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கெவின் பீட்டர்சன், இங்கிலாந்து அணிக்காக ஆடி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர். மிகச்சிறந்த வீரர் பீட்டர்சன். அப்படியிருக்கையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்த தருணத்தில் அந்த தோல்வியை காரணம் காட்டி பீட்டர்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டார். பீட்டர்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு அப்போதைய கேப்டன் குக் தான் காரணம் என பேசப்பட்டது. 

இந்நிலையில், தான் ஓய்வுபெறப்போகும் சூழலில் பீட்டர்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து விளக்கமளித்துள்ளார் குக். பிபிசி செய்தி நிறுவனத்துக்கு குக் அளித்த பேட்டியில், என் கிரிக்கெட் வாழ்வில் மிகவும் கடினமான காலக்கட்டம் அது. அந்த சம்பவம் எனது பேட்டிங்கையே பாதித்தது. ஒருநாள் ஸ்ட்ராஸ் என்னிடம் வந்து கெவின் பீட்டர்சன் இனிமேல் இங்கிலாந்துக்கு ஆடப்போவதில்லை என்று கூறினார். அந்த சமயத்தில் நானும் பீட்டர்சனை அனுப்பிவிடும் முடிவில் இருந்தேன். ஆனால் பீட்டர்சனை ஒட்டுமொத்தமாக அணியிலிருந்து நீக்க நான் விரும்பவில்லை. எனவே குறிப்பிட்ட காலத்திற்கு ஒதுக்கிவைப்போம். பிறகு மீண்டும் அணியில் எடுத்துக்கொள்வோம் என்றுதான் நான் கூறினேன். 

ஆனால் பால் டவுண்டன்(இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர்) இந்த விஷயத்தில் தெளிவு வேண்டும் என்று வலியுறுத்தினார். பீட்டர்சன் விவகாரத்தை கிரிக்கெட் வாரியம் மோசமாக கையாண்டதாக கருதுகிறேன். பீட்டர்சன் நீக்கப்பட்ட சமயத்திலேயே என் மீது குற்றச்சாட்டுகள் முன்வைகப்பட்டன. அந்த சம்பவத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகளாக நானும் பீட்டர்சனும் பேசிக்கொள்ளவில்லை. பீட்டர்சன் நீக்கப்பட்டதற்கு நான் தான் காரணம் என்ற தீராப்பழி உள்ளது. அதற்கு காலம்தான் மருந்து. விரிசலுற்ற எங்களது நட்பிறகும் காலம்தான் மருந்து என குக் தெரிவித்துள்ளார். 
 

click me!