சச்சினுக்கு ஆதரவாக இருந்ததால் தான் கேப்டன்சி வாய்ப்பை தோனியிடம் இழந்தேன்..! யுவராஜ் சிங் பகீர்

Published : May 09, 2022, 05:05 PM IST
சச்சினுக்கு ஆதரவாக இருந்ததால் தான் கேப்டன்சி வாய்ப்பை தோனியிடம் இழந்தேன்..! யுவராஜ் சிங் பகீர்

சுருக்கம்

கிரேக் சேப்பல் விவகாரத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு ஆதரவாக இருந்ததால் தான் இந்திய அணியின் கேப்டன்சி வாய்ப்பை இழந்ததாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.  

இந்திய அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் இருந்தபோது துணை கேப்டனாக இருந்தவர் யுவராஜ் சிங். ஆனால் ராகுல் டிராவிட் கேப்டன்சியிலிருந்து விலகியபின், யுவராஜ் சிங் கேப்டனாக நியமிக்கப்படாமல் அப்போது இந்திய அணியின் இளம் வீரராக திகழ்ந்த தோனி கேப்டனாக்கப்பட்டார். 

யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக் ஆகிய சீனியர் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் தோனி கேப்டனாக்கப்பட்டது பெரும் வியப்பை ஏற்படுத்தியதுடன், அந்த சீனியர் வீரர்களுக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியது.  இந்நிலையில், யுவராஜ் சிங் கேப்டன்சி வாய்ப்பை இழந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.

க்ரேக் சேப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, அவர் அணியின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள் சர்ச்சையையும் குழப்பத்தையுமே ஏற்படுத்தின. அவர் அணியை பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு வழிநடத்தியதாக குற்றச்சாட்டும் உள்ளது.

க்ரேக் சேப்பலின் காலக்கட்டத்தில் தான் நிறைய இளம் வீரர்கள் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றனர். சுரேஷ் ரெய்னா, இர்ஃபான் பதான், ராபின் உத்தப்பா உள்ளிட்ட பல திறமையான இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்தனர். அதனால் இளம் வீரர்களுக்கான பேட்டிங் ஆர்டராக 3ம் வரிசையை வைத்து பரிசோதித்தார் க்ரேக் சேப்பல். அணியின் முக்கியமான வீரரான சச்சின் டெண்டுல்கர் ஓபனிங்கில் இறங்கி அவுட்டான பின், எதிரணிகள் நம்பிக்கை பெறுகின்றன என்பதால் அவரை ஒருநாள் போட்டிகளில் 4ம் வரிசையில் பேட்டிங் ஆடவைத்தார் சேப்பல். சச்சின் டெண்டுல்கர் ஓபனிங்கில் சதங்களை விளாசி கொண்டிருந்த சமயத்தில் அவரை 4ம் வரிசையில் இறக்கிவிட்டது அணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது.

க்ரேக் சேப்பலின் முயற்சிகள் பலனளித்ததுடன் எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தின. ராகுல் டிராவிட்டின் கேப்டன்சியில் க்ரேக் சேப்பலின் பயிற்சியின் கீழ் இந்திய அணி தொடர்ச்சியாக 17 ஒருநாள் போட்டிகளில் சேஸிங்கில் வெற்றி பெற்றது. ஆனால் 2007 ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணி படுதோல்வி அடைந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. ராகுல் டிராவிட் - கிரேக் சேப்பலுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கரின் தலைமையில் ஒரு அணி செயல்பட்டது. அதனால் அணிக்குள் நல்ல சூழல் நிலவவில்லை. இரு குழுக்களாக இந்திய அணி பிரிந்து கிடந்தது.

2007 ஒருநாள் உலக கோப்பை தோல்விக்கு பின், ராகுல் டிராவிட் கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, யுவராஜ் சிங், சேவாக் ஆகிய சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு, இளம் வீரரான தோனி கேப்டனாக்கப்பட்டார்.

அதுகுறித்து பேசியுள்ள யுவராஜ் சிங், 2007ல் நான் தான் கேப்டனாகியிருக்க வேண்டும். அப்போதுதான் க்ரேக் சேப்பல் சம்பவம் நடந்தது. சேப்பலா சச்சின் டெண்டுல்கரா என்ற சர்ச்சை முற்றிவிட்டது. ஒரு சக வீரனாக நான் சச்சினுக்கு ஆதரவாக இருந்தேன். அது பிசிசிஐக்கு பிடிக்கவில்லை. எனவே என்னை தவிர யாரை வேண்டுமானாலும் கேப்டனாக்கலாம் என்று பேசப்பட்டதாக அறிந்தேன். அது உண்மையா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது. 

கேப்டன்சி வழங்கப்படாதது மட்டுமல்லாது, துணை கேப்டன் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டேன். அப்போது சேவாக் அணியில் இல்லை. அதனால் திடீரென தோனி கேப்டனாக்கப்பட்டார். 2007 டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என நினைத்தேன். துணை கேப்டனாக இருந்த என்னைத்தானே கேப்டனாக்கியிருக்க வேண்டும். ஆனால் எனக்கு எதிராக முடிவெடுக்கப்பட்டது. அதனால் எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது. இன்று அந்த மாதிரி சம்பவம் நடந்தாலும் நான் என் அணி வீரருக்குத்தான் ஆதரவாக இருப்பேன் என்று யுவராஜ் சிங் கூறினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!
ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி