2011 உலக கோப்பை நாயகன் யுவராஜ் சிங் ஓய்வு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

By karthikeyan VFirst Published Jun 10, 2019, 1:55 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து யுவராஜ் சிங் ஓய்வு பெற்றார். 
 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து யுவராஜ் சிங் ஓய்வு பெற்றார். 

இந்திய அணியில் 2000ம் ஆண்டில் அறிமுகமான யுவராஜ் சிங், 2003, 2007, 2011 ஆகிய 3 ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் ஆடியுள்ளார். 2011 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். அந்த உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் தான் வென்றார். 2011 உலக கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே யுவராஜின் பங்களிப்பு அளப்பரியது. 

அதேபோல ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி அரிய சாதனையை நிகழ்த்திய யுவராஜ் சிங், 2007ல் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றபோதும் முக்கிய பங்காற்றினார். இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ள யுவராஜ் சிங், கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இந்திய அணியில் ஆடவில்லை. 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யுவராஜ் ஆடியதுதான் கடைசி.  அதன்பிறகு நடந்த யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், ஓரங்கட்டப்பட்ட யுவராஜ், அதன்பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

கடந்த இரண்டு சீசன்களாக ஐபிஎல்லிலும் பெரியளவில் ஆடவில்லை. 2018 ஐபிஎல்லில் அவரை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் அணி, 2019 சீசனில் கழட்டிவிட்டது. இதையடுத்து 2019 சீசனுக்கான ஏலத்தில் இரண்டாம் கட்ட ஏலத்தின் போது அவரது அடிப்படை விலையான ஒரு கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. ஆரம்பத்தில் சில போட்டிகளில் வாய்ப்பு கொடுத்தது. அதன்பின்னர் யுவராஜ் சிங்கை பென்ச்சில் உட்கார வைத்தது.

இந்நிலையில், 2011 உலக கோப்பை நாயகன் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சற்று முன் செய்தியாளர்கள் சந்திப்பில், தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  

யுவராஜ் சிங் 304 ஒருநாள் போட்டிகளிலும் 40 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 8701 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!