நான் அவுட்டே இல்ல.. களத்திலிருந்து வெளியேற மறுத்த யூசுஃப் பதான்!! ரஞ்சியில் நடந்த வினோத சம்பவத்தின் வீடியோ

By karthikeyan VFirst Published Dec 13, 2019, 12:24 PM IST
Highlights

ரஞ்சி தொடரில் மும்பை - பரோடா அணிகளுக்கு இடையேயான போட்டியில், அம்பயர் தவறாக அவுட் கொடுத்ததால், களத்திலிருந்து வெளியேற மறுத்து க்ரீஸிலேயே நின்றார் பரோடா கேப்டன் யூசுஃப் பதான். 

கிரிக்கெட்டில் அம்பயர்களின் தரம் நாளுக்கு நாள் படுமோசமாகிக்கொண்டே இருக்கிறது. சர்வதேச போட்டிகள், முதல் தர போட்டிகள், ஐபிஎல் என அனைத்திலுமே அம்பயர்களின் முடிவுகள் படுமோசமாக இருக்கிறது. 

ரஞ்சி போட்டியிலும் அதுமாதிரியான சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகளுக்கு இடையேயான போட்டியில் கூட, அவுட்டுக்கு எல்லாம் அவுட்டே கொடுக்காமல் இருந்த அம்பயருடன் வாக்குவாதம் செய்தார் முரளி விஜய். அதனால் அவருக்கு, அவரது ஊதியத்திலிருந்து 10 சதவிகிதம் அபராதமாகவே விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், மும்பை - பரோடா அணிகளுக்கு இடையேயான போட்டியில், அம்பயரின் மோசமான முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மும்பை - பரோடா அணிகளுக்கு இடையேயான போட்டியில் 309 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 431 ரன்களையும் பரோடா அணி 307 ரன்களையும் அடித்தன. 124 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய மும்பை அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா இரட்டை சதமும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சதமும் அடித்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் 409 ரன்களை குவித்த மும்பை அணி, மொத்தமாக 533 ரன்கள் முன்னிலை பெற்றது. 504 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆடிய பரோடா அணி வெறும் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மும்பை அணி. 

534 ரன்கள் என்ற இலக்கை பரோடா அணி விரட்டியபோது, அந்த அணியின் கேப்டன் யூசுஃப் பதானுக்கு தவறாக அவுட் கொடுத்தார் அம்பயர். 14 ரன்களுடன் களத்தில் இருந்த யூசுஃப் பதானுக்கு, மும்பை ஸ்பின்னர் ஷேஷான்க் அட்டர்டே வீசிய பந்தை யூசுஃப் பதான் தடுத்தாட முயன்றபோது, பந்து யூசுஃபின் நெஞ்சில் பட்டு எகிறியது. அதை ஷார்ட் ஸ்கொயர் லெக்கில் நின்ற ஃபீல்டர் கேட்ச் செய்ய, மும்பை வீரர்கள் அம்பயரிடம் அப்பீல் செய்தனர். மும்பை வீரர்கள் விடாமல் அப்பீல் செய்ய, நீண்ட நேரம் யோசித்த அம்பயர் அவுட் கொடுத்துவிட்டார். 

உண்மையாகவே பந்து பேட்டில் படவேயில்லை. அதனால் கடும் அதிருப்தியடைந்த யூசுஃப் பதான் களத்தில் இருந்து வெளியேறாமல் க்ரீஸிலேயே நின்றார். அம்பயர் முடிவை திரும்பப்பெறுவார் என்ற நம்பிக்கையில், யூசுஃப் பதான் களத்தில் இருந்து வெளியேற மறுத்தார். பின்னர், மும்பை அணியின் சீனியர் வீரர் ரஹானே, யூசுஃப் பதானிடம் சென்று பேசினார். கள அம்பயர்கள் இருவரும் கலந்தாலோசித்தனர். ஆனாலும் எந்த பயனும் இல்லாததால் நீண்ட நேரத்திற்கு பின் யூசுஃப் பதான் பெவிலியனுக்கு திரும்பினார். பெவிலியனுக்கு போகும் வரை அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக தலையை ஆட்டிக்கொண்டே சென்றார் யூசுஃப் பதான். அந்த வீடியோ இதோ.. 

pic.twitter.com/8KkvgujCFs

— Utkarsh Bhatla (@UtkarshBhatla)
click me!