எல்லா வாய்ப்பையும் வீணடிக்கிறார்.. இனிமேல் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது..! சேவாக் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 24, 2021, 7:15 PM IST
Highlights

கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வீணடித்துவரும் மனீஷ் பாண்டேவுக்கு இனிமேல் இந்திய அணியில் இடம் கிடைக்காது என்று வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆட திறமை, ஃபிட்னெஸ் மற்றும் மனநிலை என அனைத்துவகையிலும் தயாராகிவிட்ட போதிலும், இந்திய அணியில் இடம் இல்லாத காரணத்தால் ஆடமுடியாமல் இருந்த வீரர்களுக்கெல்லாம் இலங்கை தொடர் அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது.

அந்தவகையில், முதல் இரண்டு போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காத சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கௌதம் மற்றும் சேத்தன் சக்காரியா ஆகிய 4 வீரர்களும் கடைசி ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினர். சஞ்சு சாம்சன் அருமையாக ஆடி 46 ரன்கள் அடித்து அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக ஆட கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தி கொண்டுள்ளார். இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், பிரித்வி ஷா, ஷுப்மன் கில் ஆகிய இளம் வீரர்கள் அனைவரும் கிடைக்கும் வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்தி, நன்றாக ஆடி ஸ்கோர் செய்து டஃப் ஃபைட் கொடுக்கின்றனர்

ஆனால் பல ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவரும் மனீஷ் பாண்டே, சர்வதேச போட்டிகளில் இந்திய அணியில் ஆட கிடைக்கும் வாய்ப்பு எதையுமே சரியாக பயன்படுத்துவதில்லை. அவருக்கு அவ்வப்போது இந்திய அணியில் மிடில் ஆர்டரில் ஆடும் வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது. அவர் மீது நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் அளிக்கும் வாய்ப்புகளை வீணடித்துவருகிறார் மனீஷ் பாண்டே.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் முதல் 2 போட்டிகளிலுமே சரியாக ஆடாத அவருக்கு, கடைசி போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியிலும் 19 பந்தில் 11 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதே அரிது. அந்தளவிற்கு வீரர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். அப்படியிருக்கையில், தொடர்ச்சியாக தனக்கு கிடைக்கும் வாய்ப்பு அனைத்தையும் வீணடித்துவருகிறார் மனீஷ் பாண்டே. 

மனீஷ் பாண்டேவின் தொடர் சொதப்பலால் அதிருப்தியடைந்த வீரேந்திர சேவாக், மனீஷ் பாண்டேவுக்கு இனிமேலும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

மனீஷ் பாண்டே குறித்து பேசியுள்ள சேவாக், மனீஷ் பாண்டே மற்றும் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக சொதப்பிவருகின்றனர். இருவருமே 15-20 ரன்கள் மட்டுமே அடிக்கின்றனர். அவர்கள் இருவருமே என்னை பெரிதும் அதிருப்தியடைய செய்துள்ளார்கள். இலங்கைக்கு எதிரான  3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அதிக ஆதாயத்தை அடைந்தது மனீஷ் பாண்டே தான். 3 போட்டிகளிலும் அணியில் இடம்பெற்ற அவர், பேட்டிங் ஆடவும் வாய்ப்பு பெற்றார். இவ்வளவுக்கும் அவர் இறங்கும்போது ஒரு போட்டியில் கூட அணி இக்கட்டான நிலையில் இல்லை. அப்படியிருந்தும் 3 போட்டிகளில் ஒன்றில் கூட சரியாக ஆடவில்லை. எனவே மனீஷ் பாண்டேவிற்கு இனிமேலும் இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
 

click me!