எனக்கு அவங்க 2 பேரோட சேர்ந்து பேட்டிங் ஆடத்தான் பிடிக்கும்.. ரோஹித்தை ஓபனா மட்டம்தட்டிய கோலி

By karthikeyan VFirst Published Apr 3, 2020, 7:10 PM IST
Highlights

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் விராட் கோலி, தனக்கு யாருடன் இணைந்து பேட்டிங் ஆட பிடிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் முதன்மையானவராக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். பேட்டிங்கில் இதற்கு முன் எட்டப்பட்ட மைல்கற்களையும் சாதனைகளையும் தகர்த்து புதிய மைல்கற்களை செட் செய்துவருகிறார். 

கொரோனாவை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால், அனைத்து கிரிக்கெட் வீரர்களுமே வீட்டில் தான் உள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் இன்ஸ்டாகிராமில் உரையாடினர்.

அப்போது, விராட் கோலியிடம் மிடில் ஓவர்களில் யாருடன் இணைந்து பேட்டிங் ஆட உங்களுக்கு அதிக விருப்பம் என்று கெவின் பீட்டர்சன் கேட்டதற்கு, தோனி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் என்று விராட் கோலி பதிலளித்தார்.

இந்திய அணிக்காக தோனியுடன் இணைந்து அதிகமாக ஆடியிருக்கும் கோலி, ஆர்சிபி அணியில் டிவில்லியர்ஸுடன் இணைந்து பேட்டிங் ஆடியிருக்கிறார். இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் மூன்றாம் வரிசையில் இறங்கும் விராட் கோலி, தொடக்க வீரர் ரோஹித் சர்மாவுடன் இணைந்து நிறைய பெரிய இன்னிங்ஸ்களை ஆடியிருப்பதுடன், ரோஹித்தும் கோலியும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் 4878 ரன்களை குவித்துள்ளனர். ஆனால் ரோஹித் சர்மாவின் பெயரை கோலி குறிப்பிடவில்லை. 

கெவின் பீட்டர்சனின் கேள்விக்கு பதிலளித்த கோலி, என்னுடன் இணைந்து வேகமாக ரன் ஓடும் வீரர்களுடன் பேட்டிங் ஆடத்தான் எனக்கு பிடிக்கும். அந்தவகையில், தோனி மற்றும் டிவில்லியர்ஸுடன் இணைந்து பேட்டிங் ஆட எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களுடன் இணைந்து பேட்டிங் ஆடும்போது, பேசிக்கொள்ளவே தேவையில்லை. அந்தளவிற்கு எங்களுக்குள் புரிதல் இருக்கும் என்று கோலி தெரிவித்துள்ளார்.

ரோஹித் வேகமாக ரன் ஓடமாட்டார் என்பதாலேயே அவரது பெயரை கோலி புறக்கணித்திருக்கிறார். ரோஹித் - கோலி பார்ட்னர்ஷிப் ரெக்கார்டு சிறப்பாக இருக்கும்பட்சத்திலும் கூட, ரோஹித்தின் பெயரை கோலி சொல்லவில்லை. வேகமாக ரன் ஓடும் வீரருடன் தான் எனக்கு பேட்டிங் ஆட பிடிக்கும் என்று கூறியதில், ரோஹித் வேகமாக ஓடமாட்டார் என்ற கருத்து மறைந்துள்ளது. ரோஹித் சர்மா வேகமாக ஓடி ஒரு ரன்னை இரண்டாகவும், 2 ரன்னை மூன்றாகவும் மாற்றமாட்டாரே தவிர பெரிய ஷாட்டுகளை அசால்ட்டாக ஆடி, ஸ்கோர் செய்துவிடுவார் என்பது அனைவரும் அறிந்ததே...

click me!